பட்டர்வொர்த், டிச.24-
கள்ள சிகரெட்டுகளை விற்பவர்கள் மீதுதான் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமே தவிர அவற்றை வாங்குபவர்கள் மீது அல்ல என்று நிதியமைச்சர், லிம் குவான் எங் தெரிவித்தார். இந்த சிகரெட்டுகள் சட்டவிரோதமானவை என்று ஒருசில வாடிக்கையாளர்களுக்குத் தெரியாதிருப்பதால் அதை விற்பவர்களுக்கு எதிராகத்தான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அவற்றின் விலை என்னதான் மலிவாக இருந்த போதிலும் இதுபற்றி தெரியாத சிலரும் இருக்கவே செய்கின்றனர். இது தொடர்பில் அடுத்தாண்டில் அரசிதழில் பதிவு செய்யப்பட்டப் பின்னர் புதிய சட்டம் அமலுக்கு வரும் என்று இங்குள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் புதிய பல்நோக்கு மண்டபத்தைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் குவான் எங் குறிப்பிட்டார்.
சிகரெட் கடத்தல் சம்பவங்களினால் நாட்டிற்கு ஆண்டுதோறும் வெ.500 கோடி வரி இழப்பு ஏற்படுவதால் அவற்றுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளைச் சுங்கத் துறை மேற்கொள்ளும். இதில் செயல்திறன்மிக்க அமலாக்க நடவடிக்கைகளை உறுதி செய்ய ஒரு நேர்மை அதிகாரி கொண்ட பணிக்குழுவை சுங்கத் துறை கொண்டிருக்கும்.
அதிலும் இதற்குப் புதிய சட்டம் அரசு சார்பற்ற இயக்கங்கள் கொடுத்த அழுத்தத்தினால்தான் அமல்படுத்தப்படுகிறது.
இது குறித்து அமல்படுத்தப்படும் நேரத்தில் அறிவிக்கப்படும் என்பதால் கடுமையான தண்டனைகள் தொடர்பில் இப்போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும் என்று பாகான் தொகுதி எம்.பி.யுமான குவான் எங் மேலும் கூறினார்.


