அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > கிறிஸ்துமஸ் நாளில் ஈகையை போற்றுவோம்! – டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

கிறிஸ்துமஸ் நாளில் ஈகையை போற்றுவோம்! – டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், டிச. 24-

இன பாகுபாடின்றி அனைவரும் சமமே என்ற கோட்பாட்டில் வாழும் மலேசியர்களாகிய நாம் ஒவ்வோர் ஆண்டும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைப்பது பண்டிகைக் காலங்களில் தான். அவ்வளவில் சிறு பிள்ளைகள் கூட பெரிதும் எதிர்பார்க்கும் பண்டிகைகளில் ஒன்றானது இறைமகன் யேசு பிறான் பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையாகும்.

இந்த நன்நாளில், நம் மனம் மகிழ்வது போல், இயேசு பாலன் பிறப்பின் உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக என வானவர்கள் இயேசு பாலகனுக்கு வாழ்த்துப் பகிர்ந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். இறைமகன் பிறப்பை அறிவிக்கும் விதமாய் டிசம்பர் முதல் தேதியே வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிட்டு இது கிறிஸ்துமஸ் மாதம் என்று அறிவிக்கும் நாம் வீட்டைச் சுத்தம் செய்வதைப் போலவே நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அகற்றிட வேண்டிய தருணம் இது.

நம் மனமே கடவுள் வாழும் ஆலயமாகும். ஆதலால் அம்மனமே இறைமகன் பிறக்கும் மனத்தொழுவம் என்பதால் தூய்மைப்படுத்துதல் நமது கடமையாகும். அப்படியிருக்கையில் ஒவ்வொரு வருடமும் நம்மைத் தூய்மைப் படுத்திக்கொள்ள கிறிஸ்து தன் பிறப்பின் மூலம் வாய்ப்பு அளிக்கிறார் என்பதை அனைவரும் மறந்துவிடக்கூடாது என ம.இ.கா.வின் தேசிய தலைவரும் மேலவை தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

எளிமையின் அடையாளமாய் பிறந்த யேசு பொறுமையின் சிகராமாய் விளங்கியதும் நமக்கு நன்னெறிகளை கற்றுத் தரும் பாடமாகும். ஆதலால் இப்பெருநாளில் பழமையின் வேர்கள் மறைந்து, புதுமைதுளிர்கள் துலிர்க்க வேண்டும்.

வன்முறைகள் என்ற காரிருள் விடைபெற்று, நன்முறைகள் என்ற ஆதவன் வரவேற்கப்பட வேண்டும். மேலும் தன்னம்பிக்கை எனும் தீபஒளி, நம் அனைவரது மனங்களிலும் ஒளிர வேண்டும். சிறப்பு மிகு இயேசு பாலன் பிறப்பானது முரண்பட்ட சமூகத்தை முறைப்படுத்த நிகழ்ந்த நிகழ்வு, சமதர்மம், சமூக மாற்றம், சமூக விடியல், புதிய போக்குகள் போன்ற முன்னேற்றச் சிந்தனைகளை உள்ளடக்கிய விழுமியங்களைக் கொண்டது. ஆண்டவனின் பிள்ளைகளாகிய நாம் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும் இயேசுபிரானின் உயரிய நெறியைப் பின்பற்ற வேண்டும்.

பகைவரிடத்திலும் அன்பு காட்டி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ இந்த இனிய நாளில் உறுதியேற்போம். அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் பிறந்த இந்த நாளில் உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கி மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். ஒருவர் மற்றவரிடத்தில் அன்பு செலுத்துவதில் இருந்து அவர் என்னுடைய சீடர் என்பதை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதே வேதவாக்கு.

இந்த வாக்கை இந்த நன்னாளில் அனைவரும் கடைப்பிடித்து அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும் முனைப்புக் காட்டுவோம். ஆகவே கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ அன்பர்களுக்கு எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் என விக்னேஸ்வரன் தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன