லிவர்பூல், டிச.27-

30 ஆண்டுகளுக்குப் பிறகு லீக் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கும் லிவர்பூல், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. புதன்கிழமை அன்பீல்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் 4 – 0 என்ற கோல்களில் நியூகாசல் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

நியூகாசலுக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்த பருவத்தில் தோல்வியே காணாத தனது சாதனையை லிவர்பூல் தக்க வைத்து கொண்டுள்ளது. 51 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல், மென்செஸ்டர் சிட்டியுடனான தனது புள்ளி வேறுபாட்டை ஏழாக அதிகரித்துக் கொண்டுள்ளது.

11 ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் முதல் கோலை டெஜான் லொவ்ரேன் போட்டார். முதல் பாதி ஆட்டம் 1 – 0 என்ற கோலில் முடிவடைந்த வேளையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 47 ஆவது நிமிடத்தில் முஹமட் சாலா, கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

79 ஆவது நிமிடத்தில் ஷெர்டான் சக்கிரி லிவர்பூல் அணியின் மூன்றாவது கோலைப் போட்ட வேளையில், பாபின்ஹோ போட்ட கோல், லிவர்பூல் கிளப்பின் வெற்றியை உறுதிச் செய்தது. லீக் பட்டத்தை கைப்பற்றுவதில் லிவர்பூலுக்கு கடும் சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நடப்பு வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி 1 – 2 என்ற கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் சனிக்கிழமை சொந்த அரங்கில் கிறிஸ்டல் பேலசிடம் தோல்வி கண்ட மென்செஸ்டர் சிட்டி அந்த தோல்வியில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், மற்றொரு தோல்வி நிர்வாகி பெப் குவார்டியோலாவுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

14 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டியின் ஒரே கோலை பெர்னார்டோ சில்வா போட்டார். எனினும் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் மார்க் அல்பிரைடன் போட்ட கோலின் மூலம் லெய்செஸ்டர் சிட்டி ஆட்டத்தை சமப்படுத்தியது. 81 ஆவது நிமிடத்தில் ரிக்கார்டோ பெரேரா போட்ட கோல், லெய்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதிச் செய்தது.