கோலாலம்பூர், டிச.27-
தங்களின் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தடுப்பூசிப் போடுவதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை அரசு வரைய வேண்டும் என்று சுகாதார மற்றும் சமூகக் கொள்கைக்கான கேலன் மையத் தலைமை நிர்வாகி, அஸ்ருல் முகமட் காலிப் வலியுறுத்தினார்.
உலக நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வரும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள மறுக்கும் பெற்றோர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டியது அவசியமாகும். இதில் அவர்கள் தங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
இது உண்மையில் ஒரு வாழ்வா சாவா என்ற பிரச்னையாகும் என்பதால் நாம் முடிந்த வரை நோய்களைத் தடுப்பதுதான் சிறப்பாகும் என்று பத்திரிகையாளர்களிடம் அஸ்ருல் குறிப்பிட்டார்.
பொதுவாக தங்களின் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்கள் அவர்களை எளிதாக நோய்களுக்கு ஆளாக வித்திடுகின்றனர். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை பெற்றோர்கள் திறந்த மனப் போக்குடன் செயல்பட வேண்டியது அவசியமாகும், காரணம் தடுப்பூசி இளம்பிள்ளைவாதம், தொண்டை அழற்சி (diphtheria), கக்குவான் (pertussis), அம்மை நோய், நிமோனியா (pneumococcal), கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவை ஏற்படுவதைத் தடுத்து விடும்.
பிள்ளைகளுக்குத் தடுப்பூசிப் போட மறுக்கும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஆபத்துக்கு இட்டுச் செல்கின்றனர். இதனால் அவர்களுக்குக் கழுத்தில் வீக்கம் (mumps), கக்குவான் போன்ற அரிதான நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என அஸ்ருல் மேலும் கூறினார்.
இதனிடையே தங்களின் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்களுக்கு எதிராக தண்டனை விதிக்க சட்டத்தை அமல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு இன்னமும் பரிந்துரைக்கவில்லை என்று துணை அமைச்சர், டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.
தற்போதைய காலக் கட்டத்தில் பிள்ளைகளுக்குத் தடுப்பூசியைப் போடும்படி பெற்றோர்களை அரசு கட்டாயப்படுத்தாது. எனினும், அவர்களுக்கு அது குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடக் கட்டாயமாக்கும் சட்டம் இப்போது இல்லை என்பதோடு அதைப் போட அனுமதிக்காதப் பெற்றோர்களுக்கு தண்டனை விதிக்கும் பரிந்துரையும் இதுவரை இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் பெற்றோர்களுக்குத் தக்க ஆலோசனையை அமைச்சு வழங்கும். அப்போதும் அவர்கள் மறுத்தால் நாம் தொடர்ந்து அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று பத்திரிகையாளர்களிடம் லீ குறிப்பிட்டார்.
தற்போது வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கட்டாயமாக்கப்படாத போதிலும் பெற்றோர்களில் 95 விழுக்காட்டினர் தங்களின் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட இணங்கியுள்ளனர். இந்த உயர்ந்த விகிதம் ஒரு போதும் பெற்றோர்களுக்குத் தடுப்பூசி பற்றிய ஆலோசனை வழங்கி வரும் அரசின் முயற்சிக்குத் தடையாய் இருக்காது.
இதில் ஒருசில கடுமையான நோய்கள் மரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் இன்னும் 5 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாத போதிலும் அது கடுமையானதாகத்தான் கருதப்படுகிறது என கோப்பெங் தொகுதி எம்.பி.யுமான லீ மேலும் கூறினார்.


