கோலாலம்பூர், டிச.27-
கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு ஆலயத்தையும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்படும்.
தலைநகர், கோலாலம்பூரில் நிர்மாணிக்கப்படும் ஆலயங்களின் நிலையை உறுதிப்படுத்த இந்நடவடிக்கை அவசியமாகிறது. அதோடு சம்பந்தப்பட்ட அந்த ஆலயங்களுக்கு யார் பொறுப்பு என்பதையும் இதன் மூலம் அடையாளம் காண முடியும் என்று கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சர், டத்தோ டாக்டர் ஷாருடின் முகமட் சாலே நேற்று கூறினார்.
பதிவு செய்யப்படாத ஆலயங்கள் மீது கோலாலம்பூர் மாநகர் மன்றம் நடவடிக்கை எடுப்பதற்கும் இப்பதிவு உதவ முடியும் என்று அவர் சொன்னார். ஆகவே கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள அனைத்து ஆலயங்களையும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இதன் மூலம் அந்தக் கோயில்களின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியும். தற்போதைய நிலையில் கட்டப்பட்டுள்ள ஆலயங்களின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியாது. சில பகுதிகளில் அதிகமான கோயில்கள் உள்ளன. ஆனால் அவை அங்கு நிர்மாணிக்கப்பட்டிருப்பது நமக்குத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆலயங்களைப் பதிவு செய்யாவிடில் அந்த ஆலயங்களுக்கு யார் பொறுப்பு என்பது நமக்குத் தெரியாது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று அவர் சொன்னார். பைத்தி ஜனாத்தி கூட்டரசுப் பிரதேச இல்லத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
ஆலயங்களைப் பதிவு செய்வதற்கான இறுதி நாள் பற்றி நாங்கள் இன்னும் விவாதித்து வருகின்றோம். அதோடு பதிவு செய்யப்படாத ஆலயங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றியும் தற்போது விவாதக் கட்டத்தில் உள்ளது என்று துணை அமைச்சர் சொன்னார்.


