மென்செஸ்டர், ஜன.1-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தைத் தற்காக்க வேண்டும் என்றால், மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூலை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும் என அதன் நிர்வாகி பெப் குவார்டியோலா சூளுரைத்துள்ளார். லிவர்பூலை வெற்றிக் கொள்ள தவறும் பட்சத்தில் மென்செஸ்டர் சிட்டி , லீக் பட்டத்தை மறந்து விட வேண்டும் என குவார்டியோலா அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் மூன்று ஆட்டங்களில் தோல்வி கண்டதால், மென்செஸ்டர் சிட்டி தற்போது லிவர்பூலைக் காட்டிலும் ஏழு புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. அதேவேளையில் 20 ஆட்டங்கள் முடிந்திருக்கும் வேளையில் லிவர்பூல் எந்த ஓர் ஆட்டத்திலும் தோல்வி காணாமல் முதல் இடத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.
பெப் குவார்டியோலா உருவாக்கிய பலம் வாய்ந்த அணி கடந்த சில ஆட்டங்களில் சறுக்கியிருப்பது கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் பிரீமியர் லீக் போட்டி முடிவடையும் முன்னர், லிவர்பூல் மேலும் சில ஆட்டங்களில் தோல்வி காணும். ஆனால் அந்த அணி தற்போது உள்ள நிலையில் அதிகமான புள்ளிகளை இழக்காது என அவர் சொன்னார்.
எனவே வியாழக்கிழமை எத்திஹாட் அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூலை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக குவார்டியோலா மேலும் தெரிவித்தார். காயம் அடைந்துள்ள பெர்னான்டின்ஹோ மீண்டும் அணிக்கு திரும்புவது சாதகமான சூழலைக் கொண்டு வரலாம் என குவார்டியோலா கூறினார்.

