கோலாம்பூர், ஜன 7

கேமரன் மலை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி மறுக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரனுக்கு கோலாலம்பூர் உயர்நிதிமன்றம் திங்கட்கிழமை அனுமதி வழங்கியது. இரு தரப்பின் வாதத் தொகுப்பை செவிமடுத்த பின்னர் நீதிபதி அறையில் நீதிபதி நோர்டின் ஹசான் இந்த முடிவை அறிவித்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமை மதியம் சிவராஜ் சந்திரனின் வழக்கு மனுவுக்கான தகுதி குறித்து செவிமடுக்கும் விசாரணைக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாக அவரது வழக்கஞர் வசந்தி ஆறுமுகம கூறினார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் சிவராஜ் வெற்றி செல்லாது என கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து சிவராஜ் இடைத்தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டதாக தேர்தல் ஆணையத் தலைவர் அஜிசான் ஹருன் அறிவித்திருந்தார்.

வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்கப்பட்டது தொடர்பில் சிவராஜ் சந்திரனின் தேர்தல் வெற்றியை தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்தது. அதனை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் 5 ஆண்டுகளுக்கு தடை விதிப்பது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

சிவராஜ் வழக்கு மனுவுக்கு கூட்டரசு முதிர்நிலை வழக்கறிஞர் எஸ்.நற்குணவதி ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அவரது ஆட்சேபத்தை நீதிபதி நோர்டின் நிராகரித்ததோடு இந்த மனு மீதான விசாரணையை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார். .

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேத்லுக்கான வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமை ஜனவரி 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.