செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > இங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் – 3 ஆவது சுற்றில் கவிழ்ந்தது லிவர்பூல் !
விளையாட்டு

இங்கிலாந்து எப்.ஏ கிண்ணம் – 3 ஆவது சுற்றில் கவிழ்ந்தது லிவர்பூல் !

வோல்வர்ஹாம்ப்டன், ஜன.8-

2018/19 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் 3 ஆவது சுற்றில் லிவர்பூல் 1- 2 என்ற கோல்களில் வோல்வர்ஹாம்ப்டனிடம் தோல்வி கண்டுள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் தற்போது முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தோல்வி கண்டிருப்பது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

கடந்த வாரம் மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக களமிறக்கிய அணியைக் காட்டிலும், வோல்வர்ஹாம்ப்டனுக்கு எதிராக லிவர்பூல் நிர்வாகி ஜூர்கன் குலோப் நிறைய மாற்றங்களைச் செய்திருந்தார். மென்செஸ்டர் சிட்டி ஆட்டத்தில் விளையாடிய ஜேம்ஸ் மில்னர், டெஜான் லோவ்ரன் மட்டுமே வோல்வர்ஹாம்ப்டனுக்கு எதிராக களமிறக்கப்பட்டனர்.

எனினும் ஜூர்கன் குலோப்பின் வியூகம் பலிக்கவில்லை. ராவுல் ஜிமேனேஸ் போட்ட கோலின் மூலம் வோல்வர்ஹாம்ப்டன் முன்னணிக்குச் சென்றது. 51 ஆவது நிமிடத்தில் டிவோக் ஒரிகி மூலம் லிவர்பூல் ஆட்டத்தை சமப்படுத்தினாலும் 55 ஆவது நிமிடத்தில் ரூபேன் நேவேஸ் போட்ட கோல் வோல்வர்ஹாம்ப்டனின் வெற்றியை உறுதிச் செய்தது.

முஹமட் சாலா, பிர்மின்ஹோ, சாடியோ மானே போன்ற ஆட்டக்காரர்கள் இல்லாததால், லிவர்பூலின் தாக்குதல் ஆட்டம் பலவீனமாகவே காணப்பட்டது. பிரீமியர் லீக் போட்டியில் பலம் வாய்ந்த செல்சி, மென்செஸ்டர் யுனைடெட், அர்செனல், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் போன்ற அணிகளை சாய்த்த வோல்வர்ஹாம்ப்டன் தற்போது லிவர்பூலையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன