வியாழக்கிழமை, ஜனவரி 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கேமரன் மலை விவகாரம்; தேசிய முன்னணிக்கு நன்மை தரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
அரசியல்முதன்மைச் செய்திகள்

கேமரன் மலை விவகாரம்; தேசிய முன்னணிக்கு நன்மை தரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஜன 8-
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தேசிய முன்னணிக்கு எது நன்மையைக் கொண்டு வருமோ அந்த நடவடிக்கை நிச்சயம் முன்னெடுக்கப்படும் என அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இன்று செவ்வாய்க்கிழமை மஇகா தலைமையகத்தில் நடந்த மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுடன் சந்திப்பு நடத்தப்பட்ட பிறகு என்ன முடிவு என்பதை அவரே அறிவிப்பார் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை மஇகாவிற்கு எது நன்மையைக் கொண்டு வருமோ அந்த நடவடிக்கையை முன்னெடுக்க மத்திய செயலவை முடிவெடுத்துள்ளது.

எங்களது நிலைப்பாடு குறித்து தேசிய முன்னணி தலைவரிடம் தெரிவிப்போம். பின்னர் ஒரு தீர்க்கமான முடிவு வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

தொகுதியை நாங்கள் விட்டு கொடுப்போமா அல்லது என்ன நடக்கும் என்பது வியாழக்கிழமைதான் தெரியவரும். அதுவரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக இத்தொகுதியில் எங்கள் கட்சியின் பலம் என்ன என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். எந்த வகையிலும் எங்களுக்கு எந்தப் பாதகமும் வராத வகையில் முடிவு எடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை மஇகா ஒருபோதும் பின்வாங்காது. கட்சிக்கு நன்மை தரக்கூடிய செயல் திட்டங்களை மட்டுமே நாம் முன்னெடுப்போம். அது குறித்து மத்திய செயலவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

இதனிடையே, கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் மஇகா போட்டியிடாது என்றும் அத்தொகுதியை தேசிய முன்னணியின் முதன்மை உறுப்பு கட்சிக்கு விட்டுக் கொடுத்து விட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இதனிடையே, தேசிய முன்னணியின் வெற்றிக்கு வழி வகுக்கக்கூடிய வேட்பாளரை அடையாளம் காணும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் எந்த கட்சியைச் சார்ந்தவராகவும் இருக்கலாம் என்ற தகவலும் வெளிவந்திருக்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன