செமினி, பிப் 28-
மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தொழிளார்களுக்கு ஆதரவளிக்க தொடங்க வேண்டுமே தவிர முதலாளிமார்கள் சார்பில் பேசக்கூடாது என்று பிஎஸ்எம் எனப்படும் பார்ட்டி சோசிலிசம் மலேசியா கட்சி கேட்டுக் கொண்டது.
தேசிய குறைந்த பட்ச சம்பளம் மிகவும் அதிகமானது என்று சில முதலாளிமார்களை மேற்கோள்காட்டி அண்மையில் குலசேகரன் கூறியிருந்தது வருத்தமளிக்கிறது என்று பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினரான எஸ்.அருட்செல்வம் தெரிவித்தார்.
ஆகையால், அவர் மனிதவள அமைச்சர் என்ற தனது பதவிக்கு பதிலாக முதலாளிமார்களுக்கான அமைச்சர் என்று பதவியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் அருட்செல்வம்.
அவர் முதலாளிமார்களுக்கான பேச்சாளர்களாகவே இருந்து வருகிறார். தொழிலாளர்கள் நலன் குறித்து அவர் அக்கறை கொள்ளவில்லை என்று அருட்செல்வம் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் வசிக்கும் ஒருவர் மாதத்திற்கு குறைந்தது 2,500 வெள்ளியை சம்பளமாக பெறுவது அவசியம் என்று பேங்க் நெகாரா ஆய்வு உட்பட பல ஆய்வுகள் காட்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரே வீட்டில் குறைந்த பட்ச சம்பள விகிதத்தை அதிகரித்திருப்பதானது தங்களீன் நடவடிக்கை செலவினத்தை உயர்த்தியிருப்பதாக முதலாளிமார்களை மேற்கோள்காட்டி சபாவில் மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனத்துடனான சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் அமைச்சர் பேசினார்.
இதனிடையே, செமினியில் குறைந்தபட்சம் சம்பளம் தொடர்பான கேள்விகள் மற்றும் புகார்களை கொண்ட தொழிலாளர்களுக்காக பிஎஸ்எம் ஹோட் டைம் சேவையை தொடங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் தேசிய குறைந்தபட்சம் சம்பளம் 1,100 வெள்ளி அமல்படுத்த தொடங்கப்பட்டது முதல் இந்த ஹோட்லைன் வழியாக பிஎஸ்எம் 35 புகார்களை பெற்றதாக இதன் தொழிலாளர் பிரிவு தலைவராக எம்.சிவரஞ்சினி தெரிவித்தார்.


