வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தேசிய முன்னணியில் இருந்து ம.இ.கா – மசீச விலகுவதால் பாதிப்பில்லை! – டத்தோ ஸ்ரீ நஸ்ரி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

தேசிய முன்னணியில் இருந்து ம.இ.கா – மசீச விலகுவதால் பாதிப்பில்லை! – டத்தோ ஸ்ரீ நஸ்ரி

கோலாலம்பூர், மார்ச் 4-

தேசிய முன்னணி கூட்டமைப்பிலிருந்து மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா), மலேசிய சீன சங்கம் (மசீச) விலகுவது அக்கூட்டமைப்பிற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என அதன் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நஸ்ரி குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியில் இருந்து விலக வேண்டும் என அந்த இரண்டு கட்சிகளும் முடிவு செய்தால் அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றார் அவர். முன்னதாக இன்று மஇகா – மசீச ஆகிய கட்சிகளின் இரண்டு தலைவர்களும் தேசிய முன்னணி கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக கூட்டறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த டத்தோஶ்ரீ நஸ்ரி மேற்கண்டவாறு கூறினார். இந்த இரண்டு கட்சிகளும் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதால் அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

முன்னதாக தேசிய முன்னணியின் தலைமை செயலாளராக டத்தோஸ்ரீ நஸ்ரியை நியமித்தது தவறு என அந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும் குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து பேசிய நஸ்ரி, அம்னோவின் தலைவர் தான் இந்த முடிவை எடுக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருக்கின்றது என்றார்.

தேசிய முன்னணியுடன் இணைந்து செயல்படுவதற்கு மலேசிய இந்திய முஸ்லிம் கட்சி (கிம்மா), ஐபிஎப், மக்கள் சக்தி கட்சி ஆகியவை தயாராக இருக்கும் நிலையில் புதிய தேசிய முன்னணியை தொடங்குவதற்கும் வாய்ப்பு இருப்பதாக நஸ்ரி சுட்டிக்காட்டினார். இதனால் எந்த பாதிப்பும் வராது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

செமினி இடைத்தேர்தலின் போது டத்தோஸ்ரீ நஸ்ரி தமிழ்ப்பள்ளி மற்றும் சீனப்பள்ளி குறித்து பேசிய ஒரு கூற்று சமூகத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்தக் கூற்றை மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் மசீச தலைவரும் சாடி இருந்தனர். இந்நிலையில் கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்த இரண்டு கட்சிகளும் அறிவித்திருப்பது மலேசிய அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தேசிய முன்னணி தலைமைத்துவம் குறிப்பாக அம்னோ தலைவர் என்ன முடிவு எடுப்பார் என்ற தகவலுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன