செவ்வாய்க்கிழமை, மே 26, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > குவா மூசாங் பூர்வகுடி மக்கள் ஆரம்பப் பள்ளிக்கு கோரிக்கை -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

குவா மூசாங் பூர்வகுடி மக்கள் ஆரம்பப் பள்ளிக்கு கோரிக்கை -அமைச்சர் பொன்.வேதமூர்த்தி

புத்ராஜெயா, மார்ச் 04-

கிளந்தான், குவாமூசாங் உட்புற பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடி மக்கள், தங்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே ஆரம்பப் பள்ளி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆகஸ்ட் 23-ஆம் நாளில் பூர்வகுடி மாணவர்கள் எழுவர் வழிதவறி காட்டினுள் காணாமல்போன அதிர்ச்சியில் இருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. அந்த ஏழு மாணவர்களில் இருவர் பரிதாபமாக இறந்த நிலையில் மற்ற ஐவரும் 46 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டனர்.

தோஹோய் தேசியப் பள்ளியில் அவர்கள் பயின்றுவந்த நிலையில், ஆசிரியரின் அனுமதி இன்றி அருகில் உள்ள ஆற்றில் குளித்துள்ளனர். இதனால் ஆசிரியர்கள் கண்டித்த நிலையில், தண்டனைக்கு அஞ்சி அவ்வெழுவரும் பள்ளிக்கு அருகில் உள்ள காட்டிற்குள் ஓடி உள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தங்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே ஓர் ஆரம்பப் பள்ளி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர் என்று பூர்வகுடி மக்கள் நலத்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, கடந்த வாரம் குவா மூசாங் உட்புற பகுதிகளில் பூர்வகுடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு இரு நாள் அலுவல் பயணம் மேற்கொண்ட நிலையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது, போஸ் சிம்போர் என்ற இடத்தில் இரவு தங்கினார்.  குவா மூசாங் உட்புறத்தில் உள்ள கம்போங் பினாட், கம்போங் ஜாடெர் ஆகிய பகுதிகளுக்கும் அமைச்சர் சென்றார்.

குவா மூசாங்கில் இருந்து, மரங்களைக் கொண்டு இணைக்கப்பட்ட பழைய தடத்தின் ஊடாக பசுங்காட்டைக் கடந்து போஸ் சிம்போர் என்னும் இடத்தை அடைய ஏழு மணி நேரம் ஆனது.

இங்குள்ள சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள், தங்களுக்கு தங்குமிட வசதியுடன் தோஹோயில் உள்ள தேடியப் பள்ளிக்கு செல்ல நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், அதிகமான பூர்வகுடி பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதையும் நேரில் தெரிந்து கொண்டதாக அமைச்சர் சொன்னார்.

இத்தகைய காரணங்களை முன்வைத்து தங்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே ஆரம்பப் பள்ளியை வேண்டும் அவர்களின் கோரிக்கையை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறேன்.

அத்துடன், இந்த சமூகத்தினர் வெளி உலகுடன் எளிதில் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக முறையான சாலை வசதி வேண்டும். இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் மரக்கட்டைகளாலான தடத்தை பூர்வகுடி மேம்பாட்டு வாரியம் அவ்வப்போது செப்பனிட்டாலும் அது போதிய அளவில் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, முறையான போக்குவரத்து வசதி இருந்தால், அது பூர்வகுடி மக்களின் பொருளாதார மேம்பாடு, மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு எளிதான பயணம் போன்றவற்றுக்கும் துணையாக இருக்கும் என்று அமைச்சர் சொன்னார்.

பூர்வகுடி சமுதாய மேம்பாட்டில் அக்கறைக் கொண்டுள்ள நம்பிக்கைக் கூட்டணி அரசு, அடுத்த வ் தேசிய பூர்வகுடி மாநாட்டை நடத்த இருக்கிறதென்று அமைச்சர் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன