ஞாயிற்றுக்கிழமை, மே 26, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஏ.எஸ் ரோமாவை தடுத்து நிறுத்திய எப்.சி போர்ட்டோ !
விளையாட்டு

ஏ.எஸ் ரோமாவை தடுத்து நிறுத்திய எப்.சி போர்ட்டோ !

லிஸ்பன், மார்ச்.7-

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகலின் எப்.சி போர்ட்டோ அணி 4 – 3 என்ற கோல்களில் இத்தாலியின் ஏ.எஸ் ரோமாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆட்டத்தில் எப்.சி போர்ட்டோ 3 – 1 என்ற கோல்களில் ஏ.எஸ் ரோமாவை வீழ்த்தியது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 2 – 1 என்ற கோல்களில் ஏ.எஸ். ரோமா வெற்றி பெற்றிருந்தாலும் கூடுதல் நேரத்தில் அலெக்ஸ் டெல்லேஸ் போட்ட கோல் எப்.சி போர்ட்டோவுக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளது.  ஆட்டம் தொடங்கிய 26 ஆவது நிமிடத்தில் பிரான்சிஸ்கோ சோரேஸ் போட்ட கோலின் மூலம் போர்ட்டோ 1 – 0 என்ற கோலில் முன்னுக்குச் சென்றது. இருப்பினும் டேனியில் டி ரோசி போட்ட கோலின் மூலம் ஏ.எஸ் ரோமா ஆட்டத்தை சமப்படுத்தியது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் மெளசா மரேகா போட்ட கோலினால், போர்ட்டோ மீண்டும் 2- 1 என்ற கோல்களில் முன்னணி வகித்தது. 90 நிமிட ஆட்டத்துக்குப் பின்னர், ஒட்டு மொத்த கோல் எண்ணிக்கையும் எதிரணியின் இடத்தில் போடப்பட்ட கோல் எண்ணிக்கையும் சம அளவில் இருந்ததாலும் வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதல் நேரம் வழங்கினார்.

இதில் 117 ஆவது நிமிடத்தில் நடுவர் வழங்கிய பினால்டியை டெல்லேஸ் கோலாக்கினார். முன்னதாக போர்ட்டோ ஆட்டக்காரர் பெனான்டோவை , ஏ.எஸ் ரோமா ஆட்டக்காரர் அலெசான்ட்ரோ புலோரேன்சி கீழே தள்ளினார். இந்த சம்பத்தை நேரில் காணாத நடுவர்  , வீடியோ துணை நடுவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பின்னர் பினால்டி வழங்குவதாக அறிவித்தார்.  இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்குத் தகுதிப் பெறும் ஏ.எஸ் ரோமாவின் கனவை போர்ட்டோ சிதைத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன