ஈப்போ, மார்ச் 10-

பழமை வாய்ந்த கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்தில் இடம் மாற்றம் கண்ட  பேரா சங்கீத தமிழ்ப்பள்ளிக்கூடம் திடல் வசதிக்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல வசதிகள் கொண்டப் பள்ளியாக உருமாறி வருகிறது. ஆனால் திடல் இல்லா குறை நிலவி வருகிறது.

இன்று இப்பள்ளியின் 65ஆவது ஆண்டு திடல் தடப்போட்டியை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவசுப்பிரமணியம் இந்த திடல் விவகாரம் குறித்துத் பேசினார்.

இப்பள்ளிக கூடம் அருகில் கேடிஎம்மிற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஏற்கனவே பலமுறை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது.

எனினும் இந்த நிலத்திற்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொளவோம் என்று வலியுறுத்தினார்.

இன்று  நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு  செலவினங்களை ஈடுகொடுக்க வெ. 3,000 நிதி உதவி செய்வதாக அறிவித்ததுடன் இப்பள்ளிக்கு ஏற்கனவே மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடியை வழங்கியதை நினைவுக் கூர்ந்தார்.

இந்த நிகழ்வில், பேசிய பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரிகா இப்பள்ளியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் சிவசுப்பிரமணியம் மற்றும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இப்பள்ளிக்கு பல்வேறு உதவிகள் வழங்கிய ஜாலான் பெண்டஹாராவைச் சேர்ந்த சிவக்குமார் நம்மிடையே இல்லை. அவரின் மறைவால் துயர் வீற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை  தெரிவித்துக் கொண்டார் .