கோலாலம்பூர், அக்டோபர் 6:
தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன், மலேசிய இந்து சங்கத்தை “இடைத்தரகர்” என குறிப்பிட்டது, கடுமையாகப் பொருள்படுத்தப்படுவதாக மலேசிய இந்து சங்கம் தெரிவித்துள்ளது.
“மலேசிய இந்து சங்கம் அரசுத் திட்டங்களின் இடைத்தரகர் அல்ல. நாங்கள் சமூக சேவகர்கள்,” என சங்கத் தலைவர் தங்க கணேசன் தெளிவுபடுத்தினார்.
அவர் இன்று மலேசிய இந்து சங்கத்தின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 1,000 ஆலயங்களுக்கு தலா RM20,000 வழங்கும் இரமணனின் முன்மொழிவை “முற்றிலும் ஏற்புடையதல்” எனக் வர்ணித்தார்.
“அந்தத் தொகையில் எந்த ஆலயமும் முக்கியமான திட்டங்களை முன்னெடுக்க முடியாது. ஒவ்வொரு ஆலயத்துக்கும் குறைந்தது RM100,000 வழங்கப்பட்டால் மட்டுமே உண்மையான முன்னேற்றம் காண முடியும்,” என தங்க கணேசன் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், ஒற்றுமை அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘தர்மா மடானி’ திட்டத்தில் தற்போது 200 ஆலயங்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறை முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் ஒவ்வொரு ஆலயத்திற்கும் RM100,000 வரை வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், “இந்தத் திட்டம் இந்திய சமூகத்தில் நேர்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதே சமயம், “நாட்டில் 1,000-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் நிலப்பட்டா சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண்பது துணையமைச்சரின் முக்கிய பொறுப்பு,” என அவர் சுட்டிக்காட்டினார்.
“தர்மா மடானி திட்டம் குறித்து அவருக்கு முழுமையான புரிதல் இல்லை. எனவே இதில் தலையிட வேண்டாம்,” என தங்க கணேசன் உறுதியுடன் தெரிவித்தார்.