கிறிஸ்ட்சர்ச், மார்ச்.15- 

நியூஸிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், உயிரிழப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இந்தச் சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ளது கிறிஸ்ட் சர்ச் நகரம். நியூஸிலாந்து நேரப்படி, வெள்ளிக்கிழமை பிற்பகல் (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை) அந்த நகரில் உள்ள அல் நூர் ( al Noor) மற்றும் டீன்ஸ் ஏவ் (Deans Ave) ஆகிய இரு மசூதிகளுக்கும் தொழுகைக்காக மக்கள் சென்றுள்ளனர். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு மசூதிக்குள் நுழைந்த ஒருவர், தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளார். மற்றொரு மசூதியில், எங்கிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எனத் தெரியவில்லை. இந்தத் தாக்குதலில் பலர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தும், உயிரிழப்பு தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், பொதுமக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலால் அந்த பகுதியே பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக மசூதிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள், பொதுக் கட்டடங்கள், வணிக வளாகங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. மேலும், அந்த நகர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்தவர் கூறும்போது, ‘நான் டீன்ஸ் ஏவ் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்தேன் அப்போது துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்டுத் திரும்பினேன். மசூதிக்கு உள்ளே வரும் பாதையில், என் மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். சில குழந்தைகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை நான் பார்த்தேன்’ எனக் கூறியுள்ளார். மற்றொருவர், ‘ துப்பாக்கிச்சூட்டில் இறந்த சிலர் என்மீது விழுந்தனர். அதனால்தான் நான் உயிர்தப்பினேன். நான் தரையில் கிடந்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

அல் நூர் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர், நியூஸிலாந்தின் ராணுவச் சீருடை போன்ற உடையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதைப் பற்றிய உறுதியான தகவலும் இன்னும் வெளியாகவில்லை. கொலையாளி, துப்பாக்கிச்சூட்டை தன் சமூக வலைதளப் பக்கத்தில் லைவ் செய்துள்ளான். மேலும், தாக்குதலுக்கு முன்னதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளான். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை உயிருடன் போலீஸார் கைதுசெய்துள்ளனர். மற்றொருவர் பற்றிய தகவல் வெளியாகவில்லை.