ஈப்போ, மார்ச் 16-
பேரா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் தொடர்பான தகவல்கள் இன்றும் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதுவரையில் அம்னோ 25 சட்ட மன்றங்களையும் பாஸ் 3 சட்டமன்றங்களையும் தங்கள் வசம் கொண்டுள்ள நிலையில் நம்பிக்கைக் கூட்டணி 31 இடங்களைத் தன் வசம் வைத்திருக்கின்றது. பேரா மாநில ஆட்சி மாற்ற விவகாரத்தில் தேசிய முன்னணிக்குத் தாவும் 2 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்தத் தகவல் மாநில அரசியல் வட்டத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இது வரையில் சுயேட்சை சட்ட மன்ற உறுப்பினர்களான டத்தோ சைனோல் ஃபாட்சியும் டத்தோ நோலி அஷிலின் ஆகியோரின் தரப்பிலிருந்து தேசிய முன்னணியில் இணைவது பற்றி எந்தத் தகவலும் அறிவிக்கப்படாத நிலையில் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதைக் குறிக்கும் வகையில் சில கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆட்சி மாற்றம் தொடர்பாக அதிகமாகக் கருத்துகளை வெளியிட்ட பேரா மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ சாரானி, தற்போதைய மாநில முதல்வர் டத்தோஸ்ரீ ஃபைசால் அசுமுவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விரைவில் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடந்ததாகத் டெஹ்ரிவிக்கப்படவில்லை.
இதுவரையில் ஆட்சி மாற்றம் தொடர்பில் அம்னோவின் கருத்துகள் அரசியல் விளையாட்டாக இருக்கின்ற நிலையில் பாஸ் கட்சியின் காரியச் சாதிப்பு நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின் பேரா மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைக்க முதன் முதலில் பாஸ் கட்சியை அணுகி சில “பேச்சு வார்த்தை” நடத்திய வேளையில் முதல்வர் பதியைக் கைப்பற்றும் மனக்கோட்டையை பாஸ் கட்டியிருந்தது. அதிகப் பதவி மோகத்தாலும் பேராசையாலும் பாஸ் கட்சிக்கு எந்தப் பதவியும் கிட்டவில்லை என அரசியல் வட்டத்தில் ஒரு பேச்சு அவ்வப்போது உலவியது.
வெறும் மூன்றே இடத்தை வென்றிருந்தாலும் இன்றும் பேரா மாநிலத் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றும் நோக்கில் தங்களின் அயராது திட்டம் தீட்டி செயல்படவும் இருக்கிறார்கள்.
தேசிய முன்னணியில் இணைந்தாலும் வெறும் மூன்றே சட்ட மன்ற இடத்தை வைத்துக் கொண்டு முதல்வர் கனவை பாஸ் கட்சியால் அடைந்து விட முடியுமா ? இதை அம்னோதான் ஆதரிக்குமா ?
ராஜதந்திரம் பயன்படுத்த எத்தனித்தாலும் வேறு விடயங்களைக் கையில் எடுக்கலாமே.
இன்று நண்பகல் வரை அரண்மனையிலுந்து ஆட்சி மாற்றம் தொடர்பாக தனக்கு எந்த அழைப்பும் தகவலும் வர வில்லை என பேரா மாநில முதல்வர் டத்தோஸ்ரீ ஃபைசால் அசுமு தெரிவித்தார். ஆட்சி மாற்றம் தொடர்பாக வதந்திகளைப் பரப்பும் முயற்சியில் ஈடுபடாமல் தங்களை நம்பி வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களின் நலன் கருதி உழைக்க அனைவரும் செயல்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.


