வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > லினாஸ் விவகாரத்தில் பக்காத்தான் அரசின் நிலைப்பாடு என்ன? -டத்தோ  டோமினிக் லாவ் கேள்வி
அரசியல்முதன்மைச் செய்திகள்

லினாஸ் விவகாரத்தில் பக்காத்தான் அரசின் நிலைப்பாடு என்ன? -டத்தோ  டோமினிக் லாவ் கேள்வி

கோலாலம்பூர், ஆக 1-

லினாஸ் உரிமம் புதுப்பிக்கப்படுவதற்கு அரிய மண் கழிவுகளை ஆஸ்திரேலியாவிற்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என்று லினாஸ் தொழிற்சாலைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை  ரத்து செய்யப்படக்கூடும் என்ற அரசாங்கத்தின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் தெரிவித்தார்.

இவ்விவகாரம்  குறித்து எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், பருவ நிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் இயோ பீ யின் விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அமைச்சரவையின் முடிவின்படி, அரிய மண் கழிவு பொருட்களின் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது  என்பது குறித்து ஆஸ்திரேலியா அரசாங்கத்துடன் நேரிடையாக பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர் இயோ அந்நாட்டிற்கு அனுப்பப் படுவார். ஆனால், இன்று வரை அந்தப் பேச்சு வார்த்தைக்கான தேதி நிர்ணயிக்கப்படவில்லை. இச்சூழல்  மக்கள் குறிப்பாக குவாந்தான்  வாசிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார் அவர்.

லினாஸின் உரிமம் புதுப்பிக்கப்படுவதற்கு  அரிய மண் கழிவு பொருட்களை அது  ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனையை அரசாங்கம் ரத்து செய்யுமா என்பதை அறிந்து கொள்ள கெராக்கான் போன்று பலரும் ஆவலாக உள்ளனர்.  ஏனெனில், அரிய மண் மக்கள் நலனுக்கு அதிக தீமைகளை விளைவிக்கும் என்று பக்காத்தான் நெடுங்காலமாக  கூறி வந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையின் கழிவுப் பொருட்கள் விஷத் தன்மைமிக்க கசிவுகளை வெளியேற்றுவதால் அது மக்களின் சுகாதாரத்தை வெகுவாகப்  பாதிக்கும் என்றார் அவர்.

இதனிடையே, மலேசியாவில் கழிவுப் பொருட்களைப்  பத்திரப்படுத்துவதற்கு  நிரந்தர கழிவு பொருள் கொள்கலன்  நிர்மாணிக்கப்படும் சாத்தியம் குறித்து அமைச்சரவை விவாதித்ததாகவும் இது குறித்து அடுத்த மாதம் லினாஸின் உரிமம்  காலாவதியாவதற்கு முன்பு அறிவிக்கப்படும் என்றும்  சிங்கப்பூரின் தெ நியூ ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழை மேற்கோள் காட்டி டோமினிக் லாவ் அறிக்கை வெளியிட்டார்.

மத்திய அரசாங்கத்தை அமைத்த பின்னர் பக்காத்தான் கூட்டணி லினாஸ் விவகாரம் மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதோடு அரிய மண் தொழிற்துறையை விரிவுபடுத்த மேலும் பல இடங்களையும் அடையாளம் கண்டுள்ளது. அதோடு,  இத்தொழிற்துறையை நாட்டின் புதிய வளமாக உருவாக்கவும் எண்ணியுள்ளது என்றார்  அவர்.

ஆட்சி அமைத்ததும் லினாஸ் அரிய மண் தொழிற்சாலை மூடப்படும் என்று பக்காத்தான் கூட்டணியினர்  தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி  அளித்தனர். இப்போது ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் பக்காத்தான் கூட்டணி தனது  தேர்தல் வாக்குறுதியை அவசியம்  நிறைவேற்ற வேண்டும். தனது  தொழிற்சாலையின் கழிவுப் பொருட்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதாக  லினாஸ் உறுதியளித்தால் மட்டுமே அதன் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றார் டோமினிக் லாவ்.

இது நிறைவேற்றப்படாமல்  போகும் பட்சத்தில், ஜசெக மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

அதே வேளையில் ,  பாசீர் கூடாங் காற்றுத் தூய்மைக்கேடு மற்றும் சுங்கைப் பட்டாணி அந்நிய நாட்டு குப்பை விவகாரம் உட்பட பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கு அமைச்சர் இயோ பீ ஹின் இன்னும் தீர்வு காணவில்லை. எனவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தகுதியான ஒருவரிடம் இப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன