வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > 14 விருதுகளை வென்ற ”முதல் படையல்” குறும்படம் மலேசியர்களின் கவனம் இருக்குமா?
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

14 விருதுகளை வென்ற ”முதல் படையல்” குறும்படம் மலேசியர்களின் கவனம் இருக்குமா?

கோலாலம்பூர் ஆகஸ்ட் 1-

மலேசிய இந்தியர்களின் தோட்டப்புற வாழ்க்கையில் மிகப் பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ள மலிவு விலை சாராயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட குறும்படம் ”முதல் படையல்”.

மதன் குமரன் மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இக்குறும்படம் உலகளாவிய நிலையில் 14 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர்களுக்கான சிறப்பு விருது என அனைத்து நிலைகளிலும் அனைவரது பாராட்டையும் பெற்ற இந்த முதல் படையல் குறும்படம் மலேசியர்களின் பார்வைக்கு இன்னமும் எட்டவில்லை.

மலேசியாவில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான கோல்ட்பில்ட் தோட்டத்தில் இக்குறும்படம் உருவாக்கப்பட்டது. இந்த குறும்படத்தில் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இக்குறும்படத்தில் தோட்டத்தை சார்ந்த இதர குடியிருப்பாளர்களும் நடித்துள்ள வேளையில், இரண்டு முன்னணி கலைஞர்களும் இதில் நடித்துள்ளனர்.

தோட்டப்புற வாழ்க்கையின் வலிகள் குறித்து இந்த குறும்படத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மலிவுவிலை சாராயத்திற்கு அடிமையாகும் தந்தைமார்களால் பிள்ளைகள் எம்மாதிரியான சவால்களை இந்த சமுதாயத்தில் எதிர்கொள்கிறார்கள் என்பதை இக்குறும்படம் விவரிக்கின்றது. ஆனால் தந்தையின் மீது பாசம் கொண்ட அந்த மகன் இறுதிவரை அவர் நினைவாக இருப்பது போல கதைக்களத்தை அமைத்த இயக்குனர் மதன்குமாரை பாராட்ட வேண்டும்.

இயற்கை அழகு கொஞ்சும் தோட்ட புறத்தை நமது கண்முன் ஒளிப்பதிவின் மூலம் நிலைநிறுத்துகிறார் இயக்குனர். இன்னமும் மலேசிய இந்தியர்களில் சிலர் தோட்டப்புறங்களில் இம்மாதிரியான வாழ்க்கையை தொடர்ந்து வருவதை இந்த முதல் படையல் குறும்படம் விவரிக்கின்றது.

குறைந்த பட்ஜெட்டில் குறும்படம் எடுப்பார்கள். ஆனால் இந்த முதல் படையல், அனைத்து நிலைகளிலும் தரம் வாய்ந்த படைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் ஒரு திரைப்படத்திற்கு இணையான செலவை இக்குறும்படத்திற்கு செலவிட்டுள்ளார். இது ஒரு கலைப் படம் என்பதால் இதனை திரைப்படமாக உருவாக்குவது தமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் மதன் குமரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

வர்த்தக ரீதியில் ஒரு திரைப்படத்தை இயக்கிய பிறகு நிச்சயம் முதல் படையலை ஒரு திரைப்படமாக உருவாக்கும் பணியை தாம்  முன்னெடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார். உலக அரங்கில் அங்கீகாரம் பெற்ற மலேசிய குறும்படமான முதல் படையலை அனைத்து மலேசியர்களும் காண வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இந்த குறும்படத்தின் ஏதாவது ஒரு காட்சி நிச்சயம் உங்களின் பழைய நினைவுகளை தட்டி எழுப்பும் என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன