Homeசமூகம்இந்தியர்களின் சொத்துடமையை உயர்த்த சிலாங்கூர் புதுமை வர்த்தக கூட்டுறவுக் கழகம் அறிமுகம்

இந்தியர்களின் சொத்துடமையை உயர்த்த சிலாங்கூர் புதுமை வர்த்தக கூட்டுறவுக் கழகம் அறிமுகம்

பூச்சோங், ஆகஸ்ட் 1

மலேசிய இந்தியர்களின் சொத்துடைமையை உயர்த்தவும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதற்காகவும் சிலாங்கூர் புதுமை வர்த்தக கூட்டுறவுக் கழகம் நேற்று அறிமுகம் கண்டது.

தொழிலதிபரும் சமூக சேவையாளருமான ஜீவி நாயர் ஆலோசனையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த கூட்டுறவு கழகத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றிருக்கின்றார் டாக்டர் ராமநாயுடு. சிறந்த செயல் திட்டங்களை வரையறுப்பதன் மூலம் இந்த கூட்டுறவுக் கழகம் சிறந்த அடைவு நிலையை எட்டும் என அதன் தலைவர் டாக்டர் ராமநாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

1000 உறுப்பினர்களை கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் தங்களின் இலக்கு என குறிப்பிட்ட அவர் தொடக்கமாக இதில் 51 பேர் அங்கத்துவம் பெற்றுள்ளதையும் தெரிவித்தார். தலா 1,000 வெள்ளி செலுத்துவதன் மூலம் இதில் நீங்கள் அங்கத்துவம் பெற முடியும். பின்னர் பங்குதாரர்களுக்கு லாப ஈவு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜீவி நாயர் அவர்களின் சிந்தனையில் உதித்தது தான் இந்த கூட்டுறவுக் கழகம். நமக்கு நாமே உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படும் அவர் மலேசிய இந்தியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்தக் கூட்டுறவு கழகத்தை உருவாக்க வேண்டும் என முனைப்பு காட்டினார். இவ்வட்டாரத்தில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான தொழிலதிபர்களை ஒன்று சேர்த்து இந்த கூட்டுறவுக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறந்த திட்டங்களை வரையறுத்து அதனை செயல்படுத்துவதன் மூலம் சிறப்பாக இயங்கும் கூட்டுறவுக் கழகங்களில் புதுமை வர்த்தக கூட்டுறவு கழகமும் இடம் பிடிக்கும் என ராமநாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தக் கூட்டுறவு கழகத்தில் மலேசிய இந்தியர்களின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்த முடியும் என சிந்திக்கும் நபர்கள்தான் வாரிய குழுவில் இடம்பெற்று உள்ளார்கள். ஒவ்வொருவரும் சிங்கங்கள். இந்த சிங்கங்களின் துணையோடு நிச்சயம் புதுமை வர்த்தகர் கூட்டுறவுக் கழகம் மூன்று மாடி கொண்ட குறைந்த விலை ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்கும் என ஜீவி நாயர் நம்பிக்கை தெரிவித்தார்.

பூச்சோங் வட்டாரத்தில் அந்த குறைந்த விலை ஹோட்டலை அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முதல் கட்டமாக அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். வரும் காலங்களில் இந்த கூட்டுறவு கழகத்தின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்த முடியும் என்ற திட்டங்கள் வரையறுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. அந்த ஆசைக்கு இந்த கூட்டுறவுக் கழகம் மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கும். நான் மட்டும் இல்லாமல் நாங்கள் அனைவரும் இணைந்து தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கு தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என ஜீவி நாயர் தெரிவித்தார். இதன் தொடக்க விழாவில் செனட்டர் சுரேஷ் சிங், மலேசிய இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளன செயலாளர் டாக்டர் ஏடி குமரராஜாவும் கலந்துகொண்டார்.

spot_img

latest articles

explore more