பெட்டாலிங் ஜெயா, ஆக 7-

மலேசியக் கிண்ண கால்பந்து போட்டியில் இன்று புதன்கிழமை  ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் ஜோகூரின் ஜே.டி.டி (JDT) குழுவை வீழ்த்துவதற்கு பி.ஜே சிட்டி கால்பந்து கிளப் உறுதிபூண்டுள்ளது.

மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றிருக்கும் பி.ஜே சிட்டி தனது தொடக்க ஆட்டத்தில் 2-1என்ற கோல் கணக்கில் பேராவின் பி.கே.என்.கே குழுவை வென்றது. அந்த வெற்றியை தொடர்ந்து இன்று நடைபெறும் ஆட்டத்திலும் வெற்றி பெறுவதற்கு பி.ஜே சிட்டி கால்பந்து குழுவினர் தீவிர முயற்சி முயற்சியை மேற்கொள்வார்கள் என அதன் பயிற்சியாளர் தேவன் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் இந்த ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு பி.ஜே சிட்டி கால்பந்து கிளப்பிட்ற்கு பெரும் ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் தன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்து கடைசி நிமிடம் வரை  ஜே.டி.டி குழுவின்  கோல்முனையை நோக்கி தாக்குதல் தொடுக்கும்படி தமது ஆட்டக்காரர்களுக்கு பணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்காப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு எதிரியின் கோல் முனையை நோக்கி தொடர்ந்து சளைக்காமல் தாக்குதல் நடத்தும்படி தமது குழுவினருக்கு ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும் தேவன் கூறினார்.

அதேவேளையில் ஜே. டி. டி குழுவை சாதாரணமாக கருதமுடியாது. சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் அக்குழுவினர் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி லீக் வரிசையில் முதலிடத்தை பெற்றதையும் நாம் மறந்துவிட முடியாது. ஜே.டி.டி குழுவினர் சிறந்த முன்னணி ஆட்டக்காரர்களை கொண்டுள்ளதோடு  மட்டுமின்றி தற்காப்பிலும்  சிறந்த ஆட்டக்காரர்களை கொண்டுள்ளனர்.

எனவே அவர்கள் எல்லா வகையிலும் பி.ஜே சிட்டி கிளப்பிற்கு ஈடுகொடுத்து விளையாடுவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எப்படி இருந்த போதிலும் இந்த ஆட்டம் பெரும் பரபரப்பாக இருக்கும் என்பது உறுதி.