வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > காணாமல்போன அயர்லாந்து இளம்பெண்ணை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்!
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

காணாமல்போன அயர்லாந்து இளம்பெண்ணை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்!

சிரம்பான். ஆக 11-

காணாமல்போன அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் நோரா அனி கொய்ரினை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆகக் கடைசியாக இந்த பெண் காணப்பட்ட இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டத்தோ முகமட் மாட் யூசோப் கூறினார்.

 ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் காணாமல்போன நோராவை தேடும் நடவடிக்கையில் தேடும் மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 317 பேர் ஈடுபட்டு வருகின்றனர். தேடும் குழு தனது பணியை இரவு வேளையிலும் தொடரும் என முகமட் மாட் தெரிவித்தார்.

அந்த இளம்பெண் இருக்கும் இடம் திட்டவட்டமாக தெரியவில்லை எனவே தொடர்ந்து தேடும் வேட்டை தொடரும் என அவர் சொன்னார். அனைத்து தரப்புக்களிடமிருந்து நாங்கள் தகவல்களை திரட்டி வருகிறோம். எல்லா கோணங்களிலும் எங்களது விசாரணை தொடர்கிறது என்றும் முகமட் கூறினார்.

நோரா அனி கடத்தப்பட்டிருக்கலாமா என்று வினவப்பட்ட போது அது தொடர்பாக போலீசுக்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என அவர் கூறினார். பலரிடம் நாங்கள் விசாரணை நடத்தி உள்ளோம்.  தங்கும் விடுதிகளில் வேலை செய்துவரும் ஊழியர்களின் வீடுகளிலும் நாங்கள் பரிசோதனை நடத்தி உள்ளோம் .வேறு எங்கும் எவரும் நோராவை கண்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் முகமட் மாட் யூசோப் தெரிவித்தார்.

நீலாய் டூசுன் ரிசோர்ட்டில் ஞாயிற்றுக்கிழமை தமது குடும்பத்தோடு தங்கிய நோரா திங்கட்கிழமை காலையில் இருந்து காணவில்லை என அறிவிக்கப்பட்டது. மனவளர்ச்சி குன்றிய அந்த இளம்பெண் தமது பெற்றோருடன் இரண்டு வார கால விடுமுறையை கழிப்பதற்காக சனிக்கிழமையன்று லண்டனில் இருந்து இங்கு வந்து சேர்ந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன