ஜாகிர் நாயக்கை வெளியேற்றுங்கள்! அமைச்சரவையில் இந்திய அமைச்சர்களின் குரல்!

கோலாலம்பூர் ஏப்ரல் 14-

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மனிதவள அமைச்சர் குலசேகரன், தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் அமைச்சரவையில் தங்களின் ஆதங்கத்தை முன்வைத்தனர்.

எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் முன்வைத்தோம். ஜாகிர் நாயக் தொடர்ந்து மலேசியாவில் இருப்பது எந்த வகையிலும் நன்மையைக் கொண்டு வராது என்பதையும் விளக்கினோம் என அந்த 3 அமைச்சர்களும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

எங்களின் கருத்துக்களுக்கு பிரதமர் செவி சாய்த்தார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் என்ன நடவடிக்கை முன்னெடுப்பார் என்பது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், அமைச்சர் குலசேகரன், அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோர் தெரிவித்தனர்.

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்

மலேசிய இந்துக்கள் பிரதமர் துன் மகாதீரை காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது தான் அதிக விசுவாசம் கொண்டுள்ளதாக ஜாகிர் நாயக் கூறிய கருத்தை, அந்த 3 அமைச்சர்களும் முன்னதாகவே மறுத்து பேசி இருந்தனர்.

அதோடு ஜாகிர் நாயக் இந்நாட்டில் இதன் பிறகு எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அவருடைய கருத்துக்கள் அமைவது குறித்து பலமுறை நாங்கள் கூறியிருக்கின்றோம்.

தற்போது இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். ஜாகிர் நாயக் விவகாரத்தில் தாம் வெளிப்படையான நடவடிக்கையை முன்னெடுக்க இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டது.