முகப்பு > குற்றவியல் > மலேசிய இந்துக்களை பிரதமர் ஏமாற்றிவிட்டார்! அரசு சாரா இயக்கங்கள் கோபம்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

மலேசிய இந்துக்களை பிரதமர் ஏமாற்றிவிட்டார்! அரசு சாரா இயக்கங்கள் கோபம்

கோலாலம்பூர் ஆகஸ்ட் 14-

மலேசிய இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருக்கும் கருத்து மிகவும் தவறானது என அரசு சாரா இயக்கங்கள் போர்க் கொடி ஏந்தி முழக்கமிட்டனர்.

மலேசிய பிரதமர் துன் மகாதீரை காட்டிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மீது மலேசிய இந்துக்கள் அதிக விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என ஜாகிர் நாயக் அண்மையில் கூறியிருந்தார். அது குறித்து பிரதமரிடம் வினவப்பட்டபோது தமக்கு எதுவும் தெரியாது என்றும் அதை நீங்கள் இந்துக்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இது மலேசிய இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையிலான அறிக்கை என இளங்கோவன் கூறினார். 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மலேசிய இந்தியர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக எம்மாதிரியான வாக்குறுதிகளை வழங்கினார்கள் என்பதை முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக தேர்தலுக்குப் பிறகு 80 விழுக்காட்டிற்கு அதிகமான இந்தியர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்தார்கள் என நீங்கள் தான் கூறினீர்கள். ஆனால் இன்று ஜாகிர் நாயக்கை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்துக்கள் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் தெரியாது எனக் கூறியிருப்பது நம்பிக்கை துரோகம் என இளங்கோவன் கூறினார்.

மலேசிய இந்துக்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளித்து இருக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் கூறினார். ஜாகிர் நாயக் மீது ஒட்டுமொத்த மலேசிய இந்துக்களும் கோபம் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவரை ஆதரித்து பேசும் பிரதமரின் நடவடிக்கை மனவருத்தம் தருவதாகவும் அவர் கூறினார்.

ஜாகிர் நாயக் உயிருக்கு ஆபத்து. அதனால் அவரை இங்கிருந்து அனுப்ப முடியாது என பிரதமர் கூறியிருந்தார். அதோடு அவரை ஏற்றுக் கொள்ள எந்த நாடுகளும் முன்வர வில்லை என்ற கூற்றையும் முன்வைத்திருந்தார். ஆனால் ஜாகிர் நாயக் தம் கலந்து கொள்ளும் ஒவ்வொரு கூட்டத்திலும் 15 நாடுகள் தம்மை இணைத்துக் கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதாக கூறி உள்ளார். இந்த இரண்டு கூற்றில் எது உண்மை என்ற கேள்வியை ஆகம அணியின் தலைவர் அருண் துரைசாமி முன்வைத்தார்.

ஜாகிர் நாயக் ஒரு சமயவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவருடைய சமயத்தை முன்னிறுத்தும் நேரத்தில் மற்ற இனங்களின் உணர்வுகளை தூண்டி விடக் கூடாது. இதற்கு பொறுப்பேற்று அவரை உடனடியாக மலேசியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என மலேசிய புகார் மையத்தின் தலைவர் சந்திரகுமணன் தெரிவித்தார்.

ஜாகிர் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரை மலேசியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என 50க்கும் அதிகமான அரசு சாரா இயக்கங்கள் போலீஸ் புகார் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன