வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > ஐரோப்பிய சூப்பர் கிண்ணத்தை வென்றது லிவர்புல் !
விளையாட்டு

ஐரோப்பிய சூப்பர் கிண்ணத்தை வென்றது லிவர்புல் !

இஸ்தான்புல், ஆகஸ்ட்.15-

2019 ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய சூப்பர் கிண்ணத்தை இங்கிலாந்தில் லிவர்புல் கைப்பற்றியுள்ளது. துருக்கிய தலைநகர் இஸ்தான்புல்லில் புதன்கிழமை ( மலேசிய நேரப்படி இன்று அதிகாலை ) நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்புல் 5 – 4  என்ற பினால்டி கோல்களில் செல்சியை வீழ்த்தியது.

கடந்த ஜூன் மாதம் ஆறாவது முறையாக ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வென்ற லிவர்புல், யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்ற செல்சியும், ஐரோப்பிய சூப்பர் கிண்ண ஆட்டத்தில் களம் கண்டன. பலம் வாய்ந்த லிவர்புல் இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்ட வேளையில், செல்சி முதல் கோலைப் போட்டு அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒலிவர் ஜீரோட் போட்ட கோலால் அதிர்ந்த லிவர்புல், சாடியோ மானே அடித்த கோலின் வழி ஆட்டத்தை சமப்படுத்தியது. முழு நேர ஆட்டம் 1 – 1 என்ற கோல்களில் முடிவடைந்த வேளையில் வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் மீண்டும் 95 ஆவது நிமிடத்தில் சாடியோ மானே போட்ட கோலின் மூலம் லிவர்புல் முன்னணிக்கு சென்றது. இருப்பினும் ஜார்கின்ஹோ அடித்த பினால்டி வழி செல்சி மீண்டும் ஆட்டத்தை சமப்படுத்தியது.

கூடுதல் நேர ஆட்டமும், சமநிலையில் முடிந்ததை அடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பினால்டி வழங்கப்பட்டது. இதில் செல்சியின் தாமி ஆப்ராஹம் அடித்த ஐந்தாவது பினால்டியை, லிவர்புல் கோல் காவலர் அட்ரியன் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் நான்காவது முறையாக லிவர்புல், ஐரோப்பிய சூப்பர் கிண்ணத்தை வென்றுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் இதே இஸ்தான்புல் நகரில்தான் லிவர்புல் தனது ஐந்தாவது ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை வென்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன