ஐரோப்பாவின் சிறந்த ஆட்டக்காரருக்கான விருது பட்டியலில் வான் டாய்க், ரொனால்டோ, மெஸ்சி !

0
17

லண்டன், ஆகஸ்ட்.16-

2019 ஆம் ஆண்டுக்கான ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்களில் , லிவர்புல் தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜில் வான் டாய்க், யுவன்டசின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பார்சிலோனாவின் லியோனேல் மெஸ்சி இறுதி மூன்று ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு தொடங்கி இந்த விருது வழங்கப்பட்டு வரும் வேளையில் மூன்று முறை அவ்விருதை வென்றுள்ள ரொனால்டோ கடந்த எட்டு ஆண்டுகளாக இறுதி மூன்று ஆட்டக்காரர்களில் ஒருவராக இடம்பெற தவறியதில்லை. அதேவேளையில் லிவர்புலின்  வெர்ஜில் வான் டாய்க் முதல் முறையாக அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

2018/19 ஆம் பருவத்தில் லிவர்புல் கிளப்புடன் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை கைப்பற்றியதை அடுத்து வான் டாய்க் அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த பருவத்தில் லிவர்புல் அணியின் மிகச் சிறந்த ஆட்டத்துக்கு வான் டாய்க், தற்காப்பு பகுதியில் முதுகெலும்பாக விளங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த விருதை இரண்டு முறை வென்றுள்ள லியோனேல் மெஸ்சி, கடந்த பருவத்தில் பார்சிலோனா அணிக்கு 48 கோல்களைப் போட்டிருந்தார். இதில் லா லீகா கால்பந்துப் போட்டியில் 36 கோல்களும், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 12 கோல்களையும் அடித்தார். எனினும் பார்சிலோனா, சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் லிவர்புலிடம் தோல்வி கண்டது.

அதேவேளையில் , ரொனால்டோவும், இத்தாலியின் யுவன்டஸி அணியில் 21 கோல்களைப் போட்டிருந்தாலும், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஹாலந்தின் அயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் அணியிடம் தோல்வி கண்டது.