வியாழக்கிழமை, நவம்பர் 21, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மக்களின் வளமான வாழ்வுக்கு மலேசிய வீடமைப்புச் சீராக்க நிதியம் துணை நிற்கும்!
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மக்களின் வளமான வாழ்வுக்கு மலேசிய வீடமைப்புச் சீராக்க நிதியம் துணை நிற்கும்!

 பினாங்கு ஆக 22-

மலேசிய வீடமைப்புச் சீராக்க நிதியத்திலிருந்து பெறப்படும் ஒதுக்கீட்டுத் தொகை,நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்குப் பெரிதும் துணை நிற்குமென்று, பினாங்கு மாநில வீடமைப்பு, ஊராட்சி மன்றம்,நகரப் பெரு வளர்ச்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவ்வண்ணம் மாநிலத்தில் அரசின் ஆதரவிலும்,தனியார் துறைகளாலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்களின் சீரமைப்புப் பணிகளுக்காக இம்முறை ஒரு கோடியே 74 லட்சம் ரிங்கிட் தொகை, சீராக்க நிதியத்திடமிருந்து கோரப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் விவரித்துள்ளார்.

மாநிலத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அமைந்திருக்கும் சம்பந்தப்பட்ட வீடுகளின் பராமரிப்புத் தேவைகளுக்கும் சீரமைப்புப் பணிகளுக்கும் இந்நிதியை, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் சுரைடா கமாருதீனுக்குத் தாம் கோரிக்கை விடுத்திருப்பதாக ஜெகதீப் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்திலுள்ள குடியிருப்புவாசிகள் தங்களின் வசிப்பிடங்களில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளுக்கும் சீரமைப்புகளுக்கும் நிவர்த்திக் காணும் வகையில், மாநில வீடமைப்புச் சீராக்கத் துறையினருக்கு விண்ணப்பிக்கலாமென்றும், இவ்வாண்டு ஆகஸ்டு திங்களுக்குள் விடுக்கப்படும் கோரிக்கைகள் இவ்வாண்டிற்குள்ளேயே பரிசீலிக்கப்படுமென்றும் ஜெகதீப் விளக்கமளித்துள்ளார்.

பினாங்கு மாநிலத்திலுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அமைந்திருக்கும் வீட்டுக் கட்டடங்களின் மேம்பாட்டிற்கு, நாட்டின் வீடமைப்புச் சீராக்க நிதியம் உதவ வேண்டுமென்று, பெரும்பாலோர் பரவலாக எதிர்ப்பார்த்திருந்த எண்ணம் தற்போது ஈடேறியிருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் அகம் நெகிழ்ந்துள்ளார்.

முந்தைய ஆட்சியில் இத்திட்டம் சாத்தியப்படவில்லை என்றும், இது ஒரு பெருங்குறையாகப் பலரை சஞ்சலப்படுத்தி வந்திருந்த நிலையில், தற்போது இதற்கு விடிவு பிறந்திருப்பது தொடர்பில் ஏராளமானோர் வரவேற்புக் கூறுவதாகவும் சுட்டிக் காட்டியிருக்கும் ஜெகதீப், இதன் பொருட்டு மாநில மக்களளின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை என்றும் ஆமோதித்துள்ளார்.

மலேசிய வீடமைப்புச் சீராக்க நிதியம் கடந்த 2010ஆம் ஆண்டு தேசிய முன்னணி ஆட்சியில் தொடங்கப்பட்ட வேளையில், பினாங்கு மாநிலத்திற்கு இதற்கான ஒதுக்கீட்டுத் தொகை பல சந்தர்ப்பங்களில் மறுக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் வந்தது பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்ததை நினைவு கூர்ந்த அவர், தற்போது ஆட்சி மாற்றத்தால் விமோசனம் கிட்டியிருப்பது தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சம்பந்தப்பட்ட நிதி மாநில அரசுக்குக் கிட்டாத பட்சத்தில், மாநில அரசே சுய முயற்சியில், இங்கிருக்கும் மக்கள் குடியிருப்பு நிலையங்களில் நிகழ்ந்திருந்த பல்வேறான பழுதுகளுக்கும் சீரமைப்புகளுக்கும் நிவர்த்திக் கண்டு, இதுவரையில் 2 கோடியே 70 லட்சம் நிதியை செலவழித்திருப்பதையும் ஜெகதீப் எடுத்துரைத்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் கீழ் மறுமலர்ச்சியுடன் செயல்படத் தொடங்கியிருக்கும் வீடமைப்புச் சீராக்க நிதியம் கீழ், இனி மாநிலத்திலுள்ள அநேக மக்கள் குடியிருப்பு நிலையங்களின் தேவைகளுக்கு உடனுக்குடன் நிவர்த்திக் காண்பதில் தடையேதும் நிகழ வாய்ப்பில்லை என்றும் ஜெகதீப் சிங் உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன