கோலாலம்பூர், நவ.28-

ரவாங், பத்து ஆராங்கில் கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி, மூன்று ஆடவர்களைப் போலீஸ் சுட்டுக்கொன்றது தொடர்பில், டிசம்பர் 13ஆம் தேதி ஷா ஆலாம் கொரொனர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கவுள்ளது.

அந்த மரண விசாரணையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிப்பதற்காக அழைக்கப்படவிருப்பதாக, சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் எஸ்.ஏ.சி ஃபாட்சில் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஓர் ஆடவரின் மனைவி காணாமல் போயிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்தும் போலீஸ் விசாரணை அறிக்கையை திறந்துள்ளது. காணாமல் போன அந்த பெண் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் போலீசிடம் தெரிவித்தால், அவரை கண்டுப்பிடிப்பதற்கு அது உதவும் என வியாழக்கிழமை கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில்  செய்தியாளர்களைச் சந்தித்த ஃபாட்சில் அஹ்மாட் கூறியுள்ளார்.

ஆயுதமேந்தி கொள்ளையிடும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அந்த மூன்று ஆடவர்களும், இரண்டு மாதங்களுக்கு ஜாலான் ரவாங்கிலிருந்து பத்து ஆராங்கிற்கு செல்லும் வழியில் 22ஆவது கிலோமீட்டரில் போலீசுடன்  துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. அந்த தாக்குதலில், அம்மூவரையும் போலீஸ் சுட்டுக்கொன்றனர்.

அச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் 08 குண்டர்கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதைப் போலீஸ் உறுதி செய்துள்ளது. மற்றொருவர், 2013ஆம் ஆண்டு நாட்டிற்குள் நுழைந்ததற்கான பதிவை குடிநுழைவுத்துறைக் கொண்டுள்ளது.

அந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், அம்மூவரும் பயணித்த வாகனத்தில், காணாமல் போனதாக கூறப்படும் பெண் இருந்ததாக கூறப்படுவதை போலீஸ் மறுத்துள்ளது. மோகனம்பாள் கோவிந்தசாமி (வயது 35) என்ற அப்பெண் குறித்து இதுவரையில் எவ்வித தகவல்களும் இல்லை.