புத்ராஜெயா, டிச.2-

இந்நாட்டில் பல இன மக்கள் இருப்பதால்தான், மலேசியாவால் தென்கொரியா, சீனா முதலான நாடுகளைப் போன்று வளர்ச்சி அடைந்த நாடு என்ற நிலையை அடைய முடியவில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குறிப்பிட்ட இனங்களிடையிலான அடைவுநிலை மிக அதிகமாக இருப்பதால்தான், நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடுகள் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘’தற்போது, ஆசியாவில் தென்கொரியா, சீனா ஆகிய இருநாடுகள் மட்டுமே வளர்ச்சி அடைந்த நாடுகள் என்ற நிலையை அடைந்துள்ளன. மலேசியாவால் ஏன் அந்த நிலையை அடைய முடியவில்லை. நாம் பல பிரச்சனைகளைக் கொண்டிருக்கிறோம்.

நம் நாடு பல்லின மக்களைக் கொண்டிருக்கும் நாடு. இனங்களின் வளர்ச்சியும் சரிசமமாக இல்லை. சில இனத்தினர் முன்னோக்கி உள்ளனர். சிலர் பின்தங்கியுள்ளனர்’’ என இன்று பிரதமர்துறை ஊழியர்களுடனான சந்திப்பில் துன் மகாதீர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனங்கள் அடிப்படையில் பணக்காரர்கள், ஏழைகல் என  வருமான இடைவெளி இருப்பது, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகர இயக்கத்திற்கு வித்திடுமோ என்ற அச்சம் எழுகின்றது. அந்த சூழ்நிலை ஒரு நாட்டிற்கு நல்லதல்ல என துன் மகாதீர் கூறியுள்ளார்.