கோலாலம்பூர், டிச.3-

மறைந்த மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் சின் பெங்கின் சாம்பலுக்கும் பக்காத்தான் ஹாராப்பானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயரின் நெற்றியிலுள்ள திருநீற்றுக்கும் தொடர்பு இருக்கின்றதா என தேசிய முன்னணியின் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் மக்களவையில் கேள்வியெழுப்பியது பெரும் சர்ச்சையானது.

அவருக்கு மக்களவையில் கலந்துக்கொள்ள இருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாஜூடினின் அக்கூற்றை ம.இ.காவின் உதவித்தலைவரான டத்தோ சிவராஜ் சாடியுள்ளார்.

தாஜுடின் அவ்வாறு கூறியது உண்மையென்றால், மற்ற சமயத்தினரின் நம்பிக்கையை பற்றி முழுமையாக தெரிந்திருக்காத நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருப்பதாக சிவராஜ் கூறியுள்ளார்.

அதேவேளையில். தாஜுடினின் அக்கூற்றுக்கு ம.இ.கா. எதிர்வினையாற்ற வேண்டுமென கூறும் பக்காத்தானைச் சேர்ந்தவர்கள், அவர்கள் கூட்டணியைச் சேர்ந்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இந்தியர்களையும் சீனர்களையும் வந்தேறிகள் என கூறிய போது எதிர் வினையாற்றியிருக்க வேண்டும். மாறாக, கபடநாடகம் கூடாது என சிவராஜ் தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.