கோலாலம்பூர், டிச.4-

இன்று நடைபெற்ற பி.கே.ஆரின் அரசியல் பிரிவு கூட்டத்திற்கு வருகைப் புரிந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் இளைஞர் மற்றும்  மகளிர் பிருவுகளுக்கான கூட்டத்தை துணைத்தலைவரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தொடக்கி வைக்கவுள்ளார்.

பி.கே.ஆரின் மாநாடு குறித்து தாங்கள் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ள அதன் தொடர்பு பிரிவு இயக்குநரான ஃபாமி ஃபாட்சில், இளைஞர், மகளிர் கூட்டங்களை அஸ்மின் அலி தொடக்கி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்விரு கூட்டங்களை பி.கே.ஆரின் ஆலோசகருமான டத்தின்ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் நிறைவு செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மகளிர் பிரிவின் கூட்டம் நாளையும் இளைஞர் பிரிவின் கூட்டம் வெள்ளிக்கிழமையும் மலாக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக பி.கே.ஆர் இளைஞர் பிரிவின் கூட்டத்தை அதன் துணைத்தலைவரே தொடக்கி வைத்து வந்துள்ளார். இம்முறை அக்கூட்டத்தை தொடக்கி வைப்பதற்கு அஸ்மின் அலிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் பதில் ஏதும் வழங்காததால், அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு மீட்டுக்கொள்ளப்பட்டதாக அதன் இளைஞர் பிரிவு தலைவரான அக்மால் நசிர் கூறியிருந்தார்.

அதோடு, தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பு மீட்டுக்கொள்ளப்பட்டதில், மற்ற தரப்பினரின் தலையீடு இருப்பதாக அஸ்மின் அலி பதிலடி கொடுத்திருந்தார். அவ்விரு கூட்டங்களையும் டத்தின்ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது, அஸ்மின் அலியே அக்கூட்டத்தை தொடக்கி வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்த சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.