Homeமலேசியாகெட்கோ: இரு தரப்புக்கும் 60 நாள் தடை! நீதிமன்றம் உத்தரவு

கெட்கோ: இரு தரப்புக்கும் 60 நாள் தடை! நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், ஆக.28-
கெட்கோ நிலத்தில் தனியார் நிறுவனமும் குடியிருப்பாளர்களும் 60 நாட்களுக்கு எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என கோலாலம்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

சம்பந்தப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனம் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைவிதிக்கக்கோரி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பி.எஸ்.எம். கட்சியின் தலைமையில் நீதிமன்றத்தில் தடை உத்தரவுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தனியார் நிறுவனமும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களும் இன்று தொடங்கி 60 நாட்களுக்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என நீதிபதி டத்தோ ஹுய் சியு கெங் தீர்ப்பளித்தார்.

இந்த தடையுத்தரவின் வாயிலாக அந்த தனியார் நிறுவனத்திற்கு ஏற்படும் நஷ்டத்திற்கு அடுத்த 14 நாட்களுக்குள் அந்தத் தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் மூவாயிரம் வெள்ளியை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். திவாலாகிய கெட்கோ நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்றதில் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக கூறி கெட்கோ மக்கள் வழக்குத் தொடுத்திருந்தனர். உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் தோல்வி கண்ட கெட்கோ மக்கள், மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த 25-2-2014ஆம் ஆண்டு வெற்றி பெற்றனர்.

குறிப்பாக, சம்பந்தப்பட்ட நிலம் விற்கப்பட்டதில் சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி அதை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணை கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து கெட்கோ மக்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதி புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ளது.

இந்த விசாரணை முடிந்து அதன் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் அந்த தனியார் நிறுவனம் அந்நிலத்திலுள்ள ரப்பர் மரங்களை வெட்டக் கூடாது என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தடையுத்தரவு கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர். இரண்டு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த பின்னர் நீதிபதி இந்த இரண்டு மாத தடை உத்தரவினை பிறப்பித்தார்.

இது குறித்து அந்த தனியார் நிறுவன தரப்பு வழக்கறிஞரான கவிமணி கூறுகையில், செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி மேல்முறையீட்டு வழக்கு செவிமடுக்கப்பட்டு இந்த 60 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டால் அந்த தீர்ப்பை பின்பற்ற வேண்டும். ஆனால், 60 நாட்களை கடந்து மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்றால் இந்த தடையுத்தரவு காலாவதியாகும். அதன் பிறகு அந்த தனியார் நிறுவனத்தினர் அந்நிலத்தில் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என கூறினார்.

இதனிடையே, பிஎஸ்எம் தரப்பு வழக்கறிஞரான கெங்காதரன் கூறுகையில், அந்நிலத்தில் மரம் வெட்டுவதையும் மரங்களை வெளியேற்றுவதையும் அந்நிறுவனம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கெட்கோ மக்களுக்கு சாதகமாக அமையும் என தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more