சீ போட்டியில் கால்பந்து பிரிவில் மலேசியா 1 என்ற கோல் எண்ணிக்கையில் தாய்லாந்திடம் வீழ்ந்தது. தொடர்ந்து 3ஆவது முறையாக தாய்லாந்து சீ போட்டியின் கால்பந்திற்கான தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. மொத்தமாக 16 முறையாக தங்கப்பதக்கத்தை அவ்வணி கைபற்றியுள்ளது.
சீ விளையாட்டுப் போட்டியின் கால்பந்து இறுதி ஆட்டம் ஷாஆலம் அரங்கில் நடந்தது. இதில் நடப்பு வெற்றியாளரான தாய்லாந்தை எதிர்த்து மலேசியா களமிறங்கியது.
முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் அவ்வப்போது, மலேசியா அணி திடீர் தாக்குதல்களை முன்னெடுத்தது, தாய்லாந்தை கலங்கடித்தது.
இச்சூழ்நிலையில் முற்பாதியின் இறுதி நிமிடத்தில் மலேசிய அணியின் கோல் காவலர் செய்த தவறினால், சொந்த கோல் புகுத்தது. இதனால் தாய்லாந்து 1 கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றது.
பிற்பாதியிலும் மலேசிய அணி கோல் புகுத்த முயற்சித்தப்போதும் அது தோல்வியில் முடிந்தது. இறுதி நிமிடம் வரை மலேசியா ஆட்டக்காரர்கள் போராடியும், கோல் புகுத்த முடியவில்லை. இதனால் 1 என்ற கோல் எண்ணிக்கையில் தாய்லாந்து வென்றது. இப்பிரிவில் மலேசியா வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது.


