கோலாலம்பூர், ஆக. 30-
குறும்படம் தயாரிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்ட பெண்மணிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் அதே வேளையில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் புதிய இளம் பெண் இயக்குநர்களுக்குச் சிறந்த ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்க ஆஸ்ட்ரோ வானவில் ‘‘மகளிர் மட்டும்” என்ற குறும்படப் போட்டி கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்போட்டியில் சுஜித்திரா தேவி அருணகிரி தேவா இயக்கத்தில் ‘பயணி குறும்படம் முதல் இடத்தை வென்று ரி.ம 10,000 தட்டிச் சென்றது. மகளிர்களுக்காக முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் குறும்படப் போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களின் படைப்புகள் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. அவர்களுக்கான அங்கீகாரத்தையும் சன்மானத்தையும் வழங்க வேண்டும் என்ற முதன்மை நோக்கத்தில் இப்போட்டியை நாங்கள் ஏற்பாடு செய்தோம் என ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி தொடக்கம் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற இணைய பதிவுகளில் மொத்தம் 31 குறும்படங்கள் கலந்து கொண்டன. அவற்றுள் 18 குறும்படங்கள் மட்டுமே போட்டிக்குத் தகுதிப் பெற்றது. அதிலிருந்து 11 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கதை, தயாரிப்பு வடிவமைப்பு, காட்சி மற்றும் ஒலி அமைப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டது. அடிப்படை விதிகளைப் பூர்த்தி செய்யாததால் எஞ்சிய 7 குறும்படங்கள் இப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டது என அவர் விளக்கமளித்தார்.
அந்த வகையில், முதல் இடத்தை ‘பயணியும், இரண்டாம் இடத்தை ‘விட்டில் பூச்சிகள் மற்றும் மூன்றாம் இடத்தை ‘நறுமுகை ஆகிய குறும்படங்கள் தட்டிச் சென்றன. மேலும், ‘கண்ணம்மா, ‘காபி, ‘பிறவி, ‘உன்னாலே, ‘மனைவி, ‘என் கனவு ஒரு பிளேபாய், ஆகிய குறும்படங்கள் ஆறுதல் பரிசை தட்டிச் சென்றன.



