கோலாலம்பூர், செப்.13-
நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக இந்திய சமுதாய முன்னோர்கள் நினைவுகூரப்பட்டனர். மலாயா தேசத்தின் மண்ணைப் பொன்னாக்கிய இந்திய தோட்டத் தொழிலாளர்களைப் பற்றி ஹிண்ட்ராஃப் தலைவரும் மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி) தேசியத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி நாடாளுமன்றத்தில் முழங்கினார் என்று எம்ஏபி சட்டப்பிரிவு இயக்குநர் கார்த்திக் சண்முகம் தெரிவித்துள்ளார்.

அன்றைய மலாயாவில் தொழில் மறுமலர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பெரும்பங்காற்றிய இந்திய தொட்டப் பாட்டாளிகளின் தியாகம் மதிக்கப்படாமல் அவர்கள் அப்படியே கைவிடப்பட்டனர் என்று கடந்த வாரம் நாடாளுமன்ற மேலவை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினார்.

இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம் பற்றியும் அவர்கள் மலாயாவுக்கு குடிபெயர்ந்த தருணத்தில் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்பட்டனர் என்பது குறித்தும் இந்த அளவுக்கு துல்லியமாக இதற்கு முன் ஒரு தமிழ்ப் பிரதிநிதியோ அல்லது இந்திய உறுப்பினரோ நாடாளுமன்றத்தில் பேசியதில்லை.

மெர்டேக்காவுக்கு முன் நாட்டை வளப்படுத்துவதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தமிழர்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தனர். விடுதலைக்குப் பின் நாடு முன்னேற்றம் அடைந்த வேலையில், இந்தியத் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தபோது, மறு குடியேற்றத்திற்கான இடம் குறித்தோ அவர்களின் வாழ்க்கைத்தரம் குறித்தோ கவனத்தில் கொள்ளப் படவில்லை.

இந்திய சமுதாயம் அடைந்த இத்தகைய இன்னலைப்பற்றி இந்த அளவுக்கு தெளிவாகவும் துணிச்சலாகவும் நாடாளுமன்றத்தில் இதற்குமுன் ஒருவரும் பதிவு செய்ததில்லை. நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்திய சமுதாயம் எதிர்கொண்டுள்ள சமூக-பொருளாதார பின்னடைவைக் களைவதற்கு ஏற்ப இனியாவது கொள்கை முடிவுகளை வகுக்க வேண்டும் என்று வழக்கறிஞருமான கார்த்திக் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.