spot_img
9.1 C
London
spot_img
Home மலேசியா கல்வி தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு – ஒரு பார்வை

தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு – ஒரு பார்வை

0
442

கட்டுரை ஆக்கம் : குமரன் வேலு

2021 வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் படைக்கப்பட்ட அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப்பள்ளிக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய குமுறலின் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது.

அதைப்பற்றி ஒரு கண்ணோட்டம் இடும் முன்பு, தொடக்கப்பள்ளி தொடர்பான புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

தேசியப் பள்ளி : 5,878 ( 100% அரசுப் பள்ளிகள்)

சீனப்பள்ளி : 1, 298 ( 32% அரசுப் பள்ளிகள்)
68% பகுதி உதவிப் பெறும் பள்ளிகள்

தமிழ்ப்பள்ளி : 527 ( 30% அரசுப் பள்ளிகள்)
70% பகுதி உதவிப் பெறும் பள்ளிகள்

அரசுப் பள்ளிகளுக்கு (மலாய்மொழியில் Sekolah Kerajaan, SK) முழு நிதி உதவியும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும். மேசை நாற்காலிகள், தளவாடங்கள், கருவிகள், மற்ற பராமரிப்பு செலவுகள், கூடுதல் கட்டிடம் கட்டும் செலவு என்று அனைத்து செலவையும் அரசாங்கமே பார்த்துக் கொள்ளும்.

பகுதி உதவிப் பெறும் பள்ளிகள்( sekolah bantuan kerajaan, SBK) தனியார் தோட்ட முதலாளிகள் அல்லது தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் இருந்தால், இணைக் கட்டிடம் கட்டும் செலவு, தளவாடங்கள் வாங்கும் செலவு, பழுது பார்க்கும் செலவு தனியார் முதலாளிகளைப் பொறுத்தது என்று அரசாங்கம் கருதியது.

தனியார் முதலாளி உட்பட எல்லோருமே வருமானவரி கட்டுகின்றனர், தேர்தல் வந்தால் சனநாயகக் கடமையை ஆற்றுகின்றனர், எனவே பகுதி உதவிப்பெறும் பள்ளிகள், அரசுப்பள்ளிகள் என்ற பாகுபாடுகள் கூடாது என்ற வாதங்கள் எழுந்தன. மேலும் எந்த குடிமகனும் தரமான கல்வி கிட்டாமல் பின்தங்கி விடக்கூடாது என்று அரசும் கொள்கை வகுத்திருக்கிறது. அரசியல் அமைப்புச்சட்டமும் அதை தெளிவாக வரையறுக்கிறது.

எனவே, அரசின் பகுதி உதவிப்பெறும் பள்ளிகளுக்கு என்றே சிறப்பு பராமரிப்பு நிதியை உருவாக்கி( Peruntukan Penyelenggaraan Sekolah Bantuan Kerajaan) அரசாங்கம் வழங்கத் தொடங்கியது. இது வரவேற்கத்தக்கது. இதனால் பல தமிழ்ப்பள்ளிகள் பயனடைந்தன.

2020 வரவுசெலவு திட்டத்தில், அரசாங்கம்( துன் மகாதிர்) ரி.ம. 50 மில்லியன் ( 5 கோடி) நிதியை தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கியது. கடந்த காலங்களில், முன்பு, கல்வித்துணையமைச்சர் அலுவலகம், ஒவ்வொரு பள்ளிக்குமான நிதி ஒதுக்கீடு தொகை குறித்து முடிவுகள் எடுக்கும்.

புதிய அரசாங்கம் ( முகிதின்) முன்புபோல் அல்லாது, நிதி ஒதுக்கும் அதிகாரத்தை கல்வியமைச்சின் சொத்துடமை மேம்பாட்டு பிரிவான Bahagian Pembangunan Aset க்கு வழங்கியது. இதன்வழி, விண்ணப்பம் செய்யும் பள்ளிகளுக்கு மட்டுமே நிதி வழங்கப்படும். முன்பு, துணைக்கல்வியமைச்சரின் அதிகாரிகள் எல்லாப் பள்ளிகளை விண்ணப்பம் செய்ய வழியுறுத்துவர்.

ஆயினும் இந்த நிதியை கீழ்கண்ட காரணங்களுக்குப் பயன்படுத்த முடியாது என்று அரசு அறிவித்து விட்டது.

  1. புதிய கட்டிடங்கள் எழுப்புவது
  2. இருக்கைகள், தளவாடங்கள், கருவிகள் , துணைப்பொருட்கள் வாங்குவது
  3. வாடகை கட்டுவது, நீர், மின்சாரம், தொலைப்பேசி, மற்ற கட்டணங்கள் செலுத்துவது

மாநில கல்வித்திணைக்களம் (JPN) வழங்கும் BPA-5 எனும் விண்ணபடிவத்தை நிறைவு செய்து நேரடியாகக் கல்வி அமைச்சின் ஒரு பகுதியான Bahagian Pengurusan Aset க்கு மின்னஞ்சல் வழி அனுப்ப வேண்டும். இப்பகுதி, மாநில கல்வி அதிகாரிகளை அனுப்பி பள்ளியின் உண்மை நிலவரத்தை கண்டறியும்.
கட்டடம் பழுதுபட்டால், அவை மாணவரின் பாதுகாப்புக்கு ஊறுவிளைக்கும் என்றால் அவற்றை பழுதுபார்க்கும் பொருட்டு பள்ளிகள் நிதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

பொதுவாக தனியாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி மேலாளர் வாரியத்தின் வைப்பக கணக்கில் நிதி சேர்க்கப்படும். முறையாகப் பதிவு பெற்ற கட்டிட மேம்பாடு தொழிலில் ஈடுபட்டிருக்கும் குத்தகையாளர்கள் ( contractor), CIDB யில் பதிவு பெற்றிருக்க வேண்டும் என்று பல விதிமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

இதனால், நம்மினக் குத்தகையாளர்கள் தமிழ்ப்பள்ளியில் குத்தகை பெறுவதில் பல தடைகளை எதிர்நோக்க வேண்டியது வரும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. குத்தகை பெறுவதில் மாநில கல்வித் திணைக்களத்தின் தலையீடுகள் இருந்தால் அவை மேலும் இந்திய குத்தகையாளர்களுக்கு இன்னலை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவிவருகிறது.

வரும் கல்வியாண்டில் (2021) அரசு உதவிப்பெறும் தமிழ்ப்பள்ளிகளுக்கு( sekolah bantuan Kerajaan) என்று சிறப்பு நிதி ஒதுக்கீடு இல்லை. எனக்கு கிடைத்த தகவலின் படி, 2020இல் ஒதுக்கப்பட்ட ரி.ம 50 மில்லியன் நிதியே இன்னும் முழுமையாக பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வில்லை என தெரிய வருகிறது.

இந்த நிதியை கட்டடங்கள் பழுது பார்க்க மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும், அந்தக் கட்டிடம் மோசமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது என்று சான்று காட்ட வேண்டும். 527 தமிழ்ப்பள்ளிகளில், கடந்த காலங்களில்
ஓரளவுக்குப் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் பழுதுபார்க்கப் பட்டுவிட்டன. ஆனால், இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டிய நிலையிலும் சில பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் , என்செய்வது இந்த நிதியை புதிய இணைக்கட்டிடம், அல்லது புதிய கட்டிடம் கட்ட பயன்படுத்த முடியாது என்று விதிகள் வரையறுக்கப் பட்டுவிடடன. புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசாங்கத்தின் வேறு நிதிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்போது கிடைத்துக் கொண்டிருப்பது பராமரிப்புக்கும் பழுது பார்ப்பதற்குமான நிதி.

இதன் அடிபடையில், 2021 வரவுசெலவு அறிக்கையில், சீனப்பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் பராமரிப்பு செலவு நிதி ஒதுக்கப்படவில்லை என்று நினைக்கின்றேன்.

இதனால், நமது இனத்தின் குத்தகையாளர்களுக்கு நட்டம்தான்.அதுவும் இந்த கோறனி (கோவிட்டு 19) பெருந்தொற்று காலத்தில் தொழிற்வாய்ப்புகள் 2021 இல் இல்லாது போவதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. அவர்கள் முறையாக நம்மின அரசியல் நிகராளிகளை அணுகி இதுபற்றி அரசாங்கத்திடம் எடுத்துக் கூறவேண்டும்.

கல்விமொழி வாரியான பள்ளி நிதி ஒதுக்கீடுகள் இனத்திற்கான ஒதுக்கீடாக நாம் கண்டுவந்தோம். இவ்வாண்டு, தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கீடு இல்லை என்றதும் நாம் வருத்தமடைகிறோம்.

இந்த நாட்டின் யதார்த்தம் இன எண்ணிக்கை அடிப்படையிலானது என்பதை மறுக்கவியலாது. மக்கள் தொகையில் 70 விழுக்காடு பூமிபுத்திரர்கள். அவர்களுக்கு நியாயமான பங்கை அரசின்

அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் கல்வி வாய்ப்புகளிலும் நமக்கு தொடர்ந்து கண்ணாமூச்சியே காட்டப்பட்டன.

90 விழுக்காடு அரசு வேலை வாய்ப்புகள் பூமிபுத்திரர்களுக்கு வழங்கப்படுகின்றன. Inclusivity எனப்படும் எல்லா இனங்களும் பங்குபெறும், இனவிகிதப்படி அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்றுவரை நிறைவேற வில்லை. ஏதோ தமுழ்ப்பள்ளிகள் இருப்பதால், 9000 நம்மின ஆசிரியர்களுக்கு அரசு வேலை கிடைக்கிறது. அதுக்கும் ஆப்பு வைத்திட சிலர் தந்திரம் செய்வது ஊரறிந்த ஒன்று.

அரசாங்கத்தின் இலவச உயர்கல்வி வாய்ப்பும் நமக்கு இனவிகிதம் அடிப்படையில் முழுமையாகக் கிடைப்பதில்லை.

முழு உறைவிடப் பள்ளி அதாவது Sekolah Berasrama Penuh வில் 100% விழுக்காடு பூமிபுத்திரர்கள். நம்மின மாணவர்கள், குறிப்பாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பே இல்லை. நல்லவேளையாக, மாரா இளையோர் அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பல்வேறு துறைசார்ந்த வேலை வாய்ப்புக்கான கல்வியை அல்லது பயிற்சியை பூமிபுத்திரர்களுக்கான அரசு கல்விக் கழகங்கள் வழஙகிவரும் நிலையில் நமக்கு அங்கேயும் வாய்ப்புகள் குறைவே.

நம்மின மாணவர்கள் ‘ யாதும் ஊரே’ என்று கிளம்பி வெளிநாடு சென்று படிப்பை முடித்து அங்கேயே பிழைப்பைத் தேட முயலும் நிலை வரும்.

கற்ற அறிவார்ந்தவர்கள் புலம் பெயர்ந்துவிட்டால், கணிசமாக நம் இனத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையும் வீழ்ச்சி அடையும்.

போதாக்குறைக்கு பிள்ளைப் பெறும் வயதில் உள்ள ஆண்களும் பெண்களும் காலம்கடத்தித் திருமணம் புரிகின்றனர். முதல் பிள்ளை பெறும் சராசரி வயது மலேசியப் பெண்களுக்கு 28-29 என்று தரவு காட்டுகிறது.

கூகுள் தேடுபொறியில் தட்டினால் கிடைத்த தரவுகளின் படி, இந்தியர்களிடையே இறப்பு விகிதம் மற்ற இனங்களை விடவும் அதிகமாக இருக்கிறது. பிறப்பு விகிதமும் மலாய்க்காரர்களை விடவும் குறைவுதான்.

இந்தியர்களில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 7.2 பேர் இறந்து விடுகிறார்கள்( 2018 ஆம் ஆண்டு கணக்கின்படி). மலாய்க்காரர்கள் 5.4 பேர் மட்டுமே இறக்கின்றனர். இந்தியரிடையே இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

1000 பெண்களிடம் ஆய்வு செய்தபோது , ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் சராசரியாக 1.26 ( ஆண்டு 2018) குழந்தைகள் பெற்றுக்கொள்வது தெரிய வருகிறது. இது மலாய்காரர்களைக் காட்டிலும் குறைவு. இந்தியர்களின் பிறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது என்பது கண்கூடு.

இந்தத் தரவு, நாளடைவில் அரசியல் அடிப்படையில் இந்தியர்களின் உரிமைகள் சில காணாமல் போகும் என்று சிலர் கூறுவதை ஏற்காமல் இருக்க முடியவில்லை. தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள், பண்பாடு, மொழிக் காப்பு, அதன்வழி பெற்றுவந்த வேலை வாய்ப்புகள் கேள்விக்குறியாகும் சாத்தியங்கள் உண்டு. இப்பொழுதே ஒரு தரப்பு தாய்மொழிப் பள்ளிகளை மூடச்சொல்லி வருகிறது.

இந்த நாட்டில், மருத்துவம், பொதுநலன், போக்குவரத்து, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் என்று பொதுத்துறைகளுக்கு மட்டும்தான் இனவிகிதப்படி நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வில்லை.

பொருளாதார வளர்ச்சி, அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பு, அரசுத்துறை சார்ந்த தொழிற்முனைவு வாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, உறைவிடப் பள்ளிக்கல்வி வாய்ப்பு, தொழிற்கல்வி வாய்ப்பு, சமயம், பண்பாடு, வழிபாட்டுத் தலங்கள் போன்றவைச் சார்ந்த வளர்ச்சி நிதி ஒதுக்கீடு இனங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் அரசு முடிவெடுக்காது.

பெரும்பான்மை இனத்தவர்களான் மலாய்க்காரர்களின் அல்லது பூமிபுத்திரர்களின் உரிமையை அரசாங்கம் கண்டிப்பாக பேணவேண்டும். மற்றவர்களைவிட அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்தால் நாட்டின் வளப்பம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று
பொருள். நோயுற்ற குழந்தைக்கு கூடுதல் கவனிப்பு தரும் தாயின் நிலையில்தான் அரசாங்கம் இருக்க வேண்டும். அதில் தவறேதும் இல்லை.

நாட்டின் வளப்பம் இன விகிதப்படி எல்லோரையும் சென்று சேர்ந்தால் நல்லதுதான். தமிழ்பள்ளியும் அதில் விடுபட்டு விடாமல் காக்க வேண்டும். தமிழ்ப்பள்ளியை சுற்றி இந்தியர்களுக்கான பொருள்வாழ்வு இருக்கிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அரசாங்கத்தின் நிதி உதவியும் அதிகரித்தே தீரும். அதற்குண்டான வழியை முதலில் வகைசெய்ய வேண்டும்.