கோலாலம்பூர், நவம்பர் 23:-
மலேசிய இந்தியத் தொழில்முனைவர்களின் நலம் காக்கப்ப்பட வேண்டும். கோவிட்-19 ஆல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் வேளை பல தொழில் முனைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகம் மந்தடைந்துள்ளச் சூழலில் அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக நிதியமைச்சரிடம் சில முக்கியக் கோரிக்கைகளை இன்று மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) முன் வைத்தது.
நேரடியாக நிதியமைச்சரை அமைச்சகத்தில் சந்தித்து அவரிடம் இந்தியத் தொழில்முனைவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள், பட்ஜெட்டில் குறைக்கப்பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடு, மீட்சிக்கானப் புதியத் திட்டங்கள் போன்றவற்றைக் கோரிக்கைகளாக மைக்கி முன்வைத்தது என அதன் தலைவர் டத்தோ என் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி)
குறிப்பாக, தெக்குன் கடனுதவி இந்தியர்களுக்கென ரி.ம. 50 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இம்முறை 2021 பட்ஜெட்டில் அது 20 மில்லியனாகக் குறைக்கபட்டிருப்பது குறித்து பேசிய மைக்கி, தற்போதையச் சூழலில் அந்த ஒதுக்கீடு இந்தியத் தொழில்முனைவர்களுக்குப் போதாது என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது. எனவே, முன்பு போலவே அந்த ஒதுக்கீடு ரி.ம. 50 மில்லியனாக அதிகரிக்கப்பட வேண்டும் என மைக்கி கேட்டுக் கொண்டதாக டத்தோ என் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மேலும். புதிதாக சொந்தத் தொழில் தொடங்கி தொழில்முனைவர்களாகிய இந்திய நிறுவனங்களுக்கு ரி.ம. 20 மில்லியன் தனியாக ஒதுக்கப்பட வேண்டும். இன்றையச் சூழலில் மோசமானப் பின்னடைவையும் பாதிப்பையும் சந்தித்துள்ள அவர்களுக்கு இந்த நிதி மீட்சி பெற உதவி செய்யும் எனவும் மைக்கி கேட்டுக்கொண்டது.
தேசிய நிலையில் இந்திய நிறுவனங்கள் வளர்ச்சியடைய சில திட்டங்களையும் மைக்கி பரிந்துரைத்துள்ளது. அரசு சார்புடை 10 முதல் தர நிறுவனங்களிலும் தேசிய மேம்பாட்டுத் திட்டங்களிலும் இந்திய நிறுவனங்களுக்குக் குத்தகை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மேலும், தெராஜு, மாரா போன்று இந்தியத் தொழில்முனைவர்களுக்கு உதவவும் அவர்களின் விவகாரங்களைக் கவனிக்கவும் தனியே ஓர் செயலகம் அல்லது பிரிவு உருவாக்கப்பட நிதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போதையத் திட்ட அமைப்பில் எச்.ஆர்.டி.எஃப். எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிதியத்தில் கூடுதலாக ரி.ம. 50 மில்லியன் ஒதுக்கப்பட்டால், மேலும் 10,000 சிறு நடுத்தர இந்திய வணிகர்கள் பயனடைவார்கள்.
குறிப்பாக மைக்கி குறிப்பிட்ட 200 மில்லியன் ரிங்கிட்டை மைக்கி பெறாது. ஆனால், அரசின் கண்காணிப்பில் வங்கிகள் மூலம் அந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு ஆண்டு இறுதியில் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யும் என டத்தோ என் கோபாலகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டார்.


