கோலாலம்பூர், நவ. 24-
2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுமா என்பதே மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. குறிப்பாகத் தேசியக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டிற்கு முழுமையான ஆதரவு வழங்குவார்களா? என்பது குறித்து இதுவரையில் தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வெற்றி பெறச் செய்வதற்கு இன்னும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுத் தேவைப்படுகின்றது. தற்போது வரை நாடாளுமன்றத்தில் நடப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக 110 உறுப்பினர்களும் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக 108 உறுப்பினர்களும் உள்ளவர்.
குறிப்பாக கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்புல்லா ஓஸ்மான் அண்மையில் காலமானார். அதோடு கினாபந்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிட் 19 காரணமான தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகின்றது.
2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் மூத்த அம்னோ தலைவரான குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸலீ ஹம்ஸா பங்கேற்காததால் அவரின் நிலைப்பாடு தெளிவாக இல்லை.
அவர் தனது அடுத்த நிலைப்பாட்டைக் கூறவில்லை. இவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
முன்னதாக 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டுமா எனத் தேசிய முன்னணி கூட்டமைப்பு நேற்று தொடங்கி விவாதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


