கோலாலம்பூர், நவம்பர் 25
துன் டாக்டர் மகாதீர் 1999இல் பிரதமராக இருந்த போது 2000ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என 11-11-1999 அன்று அவர் தெரிவித்தார்.
வரலாற்றிலேயே முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அக்காலத்தில் நடந்த பொதுத் தேர்தலின் முடிவு அறிவிக்கப்பட்டப் பின்னர் பட்ஜெட் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதே போல் மீண்டும் இவ்வாண்டு நடக்க வாய்ப்புகள் உள்ளனவா ?
“தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட நாடாளுமன்றம் கலைக்கப்படுவது எவ்வளவோ மேல் என்று அரசாங்கம் நினைத்தால், நிச்சயமாக அப்படித்தான் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆதரிப்போர் எனத் தங்களை முன்னிலைப் படுத்துவோரை இன்றளவும் காண முடியவில்லை.“
மேலும், அரசாங்கம் தொடர்ந்து செயல்பட புதிய பிரதமர் நியமிக்கப்படவோ அல்லது நாடாளுமன்றத்தைக் கலைக்கவோ தான் ஶ்ரீ முகிதீன் யாசின் பேரரசருக்கு ஆலோசனை வழங்கலாம்.
அல்லது பட்ஜெட்டுக்குப் போதிய ஆதரவு இல்லையெனில், தான் ஶ்ரீ முகிதீன் யாசினின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையைக் காட்டுவதாகவும் கருதப்படலாம். இதன் காரணமாகவும் நாடாளுமன்றம் கலைக்கப்படவோ அல்லது புதிய பிரதமர் நியமிக்கப்படுவதோ நடக்கலாம்.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது தற்போதைய ஆட்சி கவிழ்ந்து விட்டது என்று பொருள்படாது. அரசாங்கம் தொடர்ந்து செயல்படும்.
“மற்றொரு சூழலில் முழு ஊரடங்குச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தலாம். இதனால், பட்ஜெட் விவகாரம் பேரரசரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கீகாரமும் பெறலாம்.“
இது போல் பல வாய்ப்புகள் அரங்கேறலாம் என மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான டாக்டர் சிவமுருகன் பாண்டியன் தெரிவித்ததாக ஆஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டிருந்தது.
நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.


