கோலாலம்பூர் | பிப்பரவரி 3:-

நாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டதாக கூறி, தமக்கு எதிராக அமலாக்கத் தரப்பினர் விசாரணையை முன்னெடுத்துள்ளதை, பி.கே.ஆர் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார்.

உள்துறை அமைச்சரும் பெர்சாத்துவின் பொதுச்செயலாளருமான டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் பொதுவில் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர், மாமன்னருக்கு தாம் அனுப்பியிருந்த கடிதத்தைப் படித்து பார்த்தாரா? அவரது மலாய் மொழி புரிதல் எந்த அளவில் உள்ளது? எனவும் எதிர்க்கட்சி தலைவருமாகிய டத்தோ ஸ்ரீ அன்வார் வினவியுள்ளார்.

நாட்டில் நடப்பில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில், தாங்கள் விடுத்துள்ள கோரிக்கையை மாமன்னர் அவரது கருணை மற்றும் விவேகத்திற்கு ஏற்ப பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். அதில், கேட்டுக்கொள்கிறோம், மேல்முறையீடு செய்கிறோம் ஆகிய சொற்களின் அர்த்தம் ஹம்சாவிற்கு புரியவில்லையா? அல்லது வற்புறுத்தலை அச்சொற்கள் அர்த்தப்படுத்துகின்றதா? நாங்கள் ஒப்புக்கொள்ளாத விவகாரங்களில், நடப்பு சூழலை மாமன்னர் சரி செய்ய சாதாரண மக்களும் முனைமுக பணியாளர்களும் அவரிடம் கோரிக்கையை முன்வைக்கக்கூடாதா?

அவசர நிலை காலத்தில், நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு பிரதமர் தான் ஸ்ரீ முஹிஃபின் யாசின் மாமன்னரிடம் வலியுறுத்தியுள்ளது, சட்டத்திற்கு முரணானது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்காததால், முஹிடினின் பதவி கேள்விக்குறியாக உள்ளது.

அத்துடன் அவசரநிலை காலத்தில், முன்னெடுக்கின்ற எத்தகைய நடவடிக்கைகளுக்கும் மக்கள் கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும் என அரசாங்கம் கருதுகின்றதா? மாமன்னருக்கு கோரிக்கையை முன்வைக்கும் மக்களை அரசாங்கம் மிரட்டக்கூடாது எனவும் டத்தோ ஸ்ரீ அன்வார் நினைவுறுத்தியுள்ளார்.