சென்னை | பிப்பரவரி 3:-

நடந்து முடிந்த பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் இவரது நடவடிக்கைகள் பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்டாலும் மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்களை சரியான நேரத்தில் மாற்றிக் கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரையும் இவரது நடவடிக்கைகளையும் ரசிக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது.

அந்த ரசிகர் கூட்டம் பாலாஜி முருகதாஸை நிகழ்ச்சியின் இறுதி வரை அழைத்து வந்தது. 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த பாலாஜிக்கு நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் கிடைத்தது. இந்தப் புகழின் மூலம் இனி அவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத சோகம் நிகழ்ந்துள்ளது.

பாலாஜி முருகதாஸின் குடும்பத்தார்

பிக்பாஸ் பாலாஜியின் தந்தை நேற்று திடீரென மரணமடைந்துள்ளார். இதுவும் கடந்து போகும் என பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகர் ஆரி தனது ட்விட்டர் பதிவில், “பாலாஜி முருகதாஸின் தந்தை இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு இந்த துயரத்திலிருந்து மீண்டு வரும் பலமும் தைரியமும் கிடைக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக அனிதா சம்பத் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு வீடு திரும்பினார். தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்ற அனிதா சம்பத்தின் தந்தை சென்னை திரும்பும் வழியில் இரயிலில் மரணமடைந்தார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் தனது தந்தையை பார்க்க முடியவில்லையே என்று உடைந்து போனார் அனிதா.

– நன்றி : நியூஸ் 18 தமிழ்