கோலாலம்பூர் | ஜூன் 5:-
கடந்த ஜூன் 1ஆம் நாள் முதல் தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் மது மட்டும் விற்கக்கூடியக் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) தெரிவித்துள்ளது.
இதரப் பல சரக்குக் கடைகளிலும் பேரங்காடிகளிலும் மது விற்கும் பிரிவுக்கு அனுமதி உண்டு என அம்மன்றம் குறிப்பிட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் காலை மணி 8.00 முதல் இரவு மணி 8.00 வரையில் இயங்கும் கடைகளில் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கோலாலம்பூரில் சிலப் பேரங்காடிகளில் மது விற்கத் தடை விதிக்கப்பட்டதாக குழப்பமும் ஏற்பட்டிருந்தது.
இதனை ம.சீ.ச.வின் தேசியச் செயலாளர் சூன் சின் வூன், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் விதிமுறைகளைக் காட்டிலும் தன்மூப்பானச் செயலாகச் சித்தரித்தார்.
தேசியப் பாதுகாப்பு மன்றாத்தில் விதிமுறைப் பட்டியலை ஒப்பிடும்போது, மற்ற குளிர்பானங்களைப் போலவே மதுவும் விற்கப்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மது விற்கும் கடைகள் மூடப்படுவது குறித்துத் தற்காத்துப் பேசிய உள்நாட்டு வாணிபம், பயனீட்டாளர் விவகாரத் துறையின் துணை அமைச்சர் ரோசோல் வாஹிட், மது அத்தியாவசியப் பொருள் அல்ல எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரம், சிகரெட்டுகள் குறித்து கருத்துரைத்த அவர், அதனை விற்பதில் இருந்து நிறுத்த முடியாது எனவும் அப்படிச் செய்தால் அது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தி விடும் எனக் குறிப்பிட்டார்.


