கிள்ளான் | ஜூன் 4 :-

கிள்ளான் லிட்டல் இந்தியாவில் 100 ஆண்டு வரலாற்றைக் கொண்ட பாடாங் செட்டி இடத்திற்கு கிள்ளான் நகராண்மைக் கழக சதுக்கம் என மறு பெயரிடும் விவகாரத்திற்கு பல தரப்பினரிடம் இருந்து பல்வேறு கருத்துகள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

வரலாற்றுப்பூர்வ ‘பாடாங் செட்டி’ பெயர் நிலைநிறுத்தப்பட வேண்டும். இந்த இடத்திற்கு மறுபெயரிடுவது வருத்தத்தை அளிப்பதாக பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) கிள்ளான் கிளைத் தலைவர் நல்லன் தனபாலன் தெரிவித்தார்.

“பாடாங் செட்டி எனும் இந்த இடமானது வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. எந்தவோர் அவப்பெயரும் இல்லாத இந்தப் பகுதியின் பெயர் நிலைநிறுத்தப்பட வேண்டுமே அன்றி மாற்றப்படுவதற்கு அவசியம் இல்லை” என்றார் அவர்.

‘ஏன் இந்த பரிந்துரை? இன்று நேற்றல்ல, அண்மைய காலமாக பொது மக்களில் பலர் இவ்விவகாரம் குறித்து என்னிடம் கவலையும் அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர்” என்று நல்லன் குறிப்பிட்டார்.

“பாடாங் செட்டி மிகவும் உயர்ந்த மதிப்பு பெற்றது . 100 ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ள இந்த வரலாற்றுப் பூர்வ பெயரானது நிலைநிறுத்தப்படுவது சிறப்பு. இது பெயர் மாற்றம் காண்பது குறிப்பிட்ட தரப்பினருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்” என்றார்.

“இந்தப் பாரம்பரியமிக்க பெயர் நிலைநாட்டப்பட வேண்டும். மாநில அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள இத்தொகுதி வாக்காளர்களின் மன உணர்வை சிலாங்கூர் மாநில அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் ” என்று அவர் மேலும் சொன்னார்.
மேலும்,  பாடாங் செட்டி உள்ளூர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக மக்களாலும் அறியப்பட்டது. எனவே இதன் பெயர் மாற்றத்திற்கு அவசியம் என்ன என்று அவர் வினவினார்.