கோலாலம்பூர் | ஜூன் 10 :-

கடந்த ஜூன் 3 முதல் ஜூன் 8 ஆம் நாள் வரை மேற்கொள்ளப்பட்டக் கண்காணிப்பில், நாட்டில் 23 வகையான புதிய உருமாறிய கிருமிகள் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக 19 கிருமிகள் Beta (B.1.351) வகையைச் சார்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கிருமியால் சிலாங்கூரில் 8 நேர்வுகள், புத்ராஜெயாவில் 3 நேர்வுகளும், கோலாலம்பூர், மலாக்கா, கேடா ஆகிய மாநிலங்களில் தலா இரு நேர்வுகளும் பெர்லிஸ், பேரா ஆகிய மாநிலங்களில் தலா 1 நேர்வும் பதிவாகியுள்ளன என சுகாதாரத் துறை அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் முகம்மட் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Delta (B.1.617.2) வகைத் தொற்று புத்ராஜெயாவிலும் கோலாலம்பூரில் கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று வரையில், கவனிக்கப்பட வேண்டிய உருமாறிய கிருமிகள் பட்டியலில் 161 நேர்வுகள் பதிவாகியுள்ளன.

உருமாறிய கிருமிகள் பட்டியலும் நேர்வுகளும்:

  • Beta (B.1.351) – 123 நேர்வுகள்
  • Delta (B.1.617.2) – 13 நேர்வுகள்
  • Alpha (B.1.1.7) – 9 நேர்வுகள்
  • Theta (P.3) – 12 நேர்வுகள்
  • Eta (B.1.525) – 3 நேர்வுகள்
  • Kappa (B.1.617.1) – 1 நேர்வு

தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு அவ்வப்போது மேர்கொண்டு வருகிறது. கோவிட்-19 பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சமூகத்தில் கோவிட்-19 பரவலைத் தடுக்கும் இதர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பொது மக்கள், தங்களையும் தங்கள் குடும்பாத்தாரையும் கோவிட்-19 தடுப்பூசிக்காகப் பதிந்து கொள்ளுமாறும் டாக்டர் நோர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார்.