கோலாலம்பூர் | ஜூன் 12 :-

நாட்டிலுள்ள பூ வியாபாரிகள் அனைவரும், ஆலயங்களுக்கும், சமய நிகழ்ச்சிகளுக்கும் பூ விற்பனையில் ஈடுபடுவதற்கான அனுமதியை அரசாங்கம் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் அறிவித்தது.

 இதற்கு முன்னதாக கேமரன் மலையில் பூக்கள் பயிரிடும் மற்றும் விற்பனைத்துறையில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகள் பொது முடக்கத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதை நான் அறிந்தேன். குறிப்பாக கேமரன் மலையில் வியாபாரிகள் பலரும், பூக்கள் விநியோகம் செய்ய முடியாததால் அழுகிப் போகும் நிலை குறித்துத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். எனவே பாதுகாப்பு அமைச்சிற்கு, 3இலிருந்து 5 நாட்களே ஆயுள் உள்ள பூக்கள் விற்பனைக்கும், அதன் வணிக செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கவேண்டும் எனும் வேண்டுகோளை கடிதம் மூலம் முன் வைத்திருந்தேன்.

அதன் அடிப்படையில் நேற்று நடைப்பெற்ற தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில், நாடு முழுவதும் பூக்கடை வியாபாரிகள் செயல்படவும், கேமரன் மலை மற்றும் பிற இடங்களில் பூக்கள் பயிரிடும் தொழில் செய்வோர் தங்கள் வணிகத்தைத் தொடரவும், அனுமதி கோரப்பட்டது. பாதுகாப்பு மன்றத்தில் அனைவரின் ஒப்புதலோடு, அரசாங்கம் இதற்கான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

கேமரன் மலை மற்றும் நாட்டிலுள்ள பூக்கள் பயிரிடும் தொழில் செய்வோர், தொடர்ந்து தங்கள் வியாபார நடவடிக்கையைத் தொடர அரசாங்கம் அனுமதி வழங்கத் தயாராக இருக்கிறது. ஆகவே ஒவ்வொருவரும் தங்களது வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள விவசாய அமைச்சின் அலுவலகத்திற்குச் சென்று அனுமதி கடிதம் பெரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நடமாட்டக் கட்டுப்பாடு என்பது கொரோனா தொற்றை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ஒன்று. கோவிட் 19 சங்கிலித் தொடரை அறுக்க அனவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதே வேளையில் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக அவதிப்படுவதைக் கவனத்தில் கொண்டே அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அவ்வப்போது மனிதாபிமான அடிப்படையில் இது போன்ற தளர்ச்சிகளும் வழங்கப்படுகின்றன.

ஆகவே பொது மக்களும் சரி, வியாபாரிகளும் சரி பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியம் செய்யாமல், முழுமையாகக் கடைப்பிடித்து இந்த சுகாதார பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும். அப்பொழுதுதான் பொருளாதார பிரச்சனையை எதிர்கொள்ள முடியும்.

மக்கள் நலன்பேணும் மனிதவள அமைச்சு
உங்கள் நலன்பேணும் உங்களில் ஒருவன்
டத்தோஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
ம.இ.கா தேசியத் துணைத்தலைவர்