கோலாலம்பூர் | ஜூன் 17:-

அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த  வேலாயுதம் எனும் ஆடவர், தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்ட ‘நேர்கொண்ட பார்வை’ பேட்டி நிகழ்ச்சியின் வாயிலாகத் தாம் மிகவும் மோசமான முறையில் மலேசிய நாட்டில் நடத்தப்பட்டது குறித்து பல கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். குறிப்பாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர் மீது அந்தக் குற்றச் சாட்டு இருந்தது.

இது குறித்து மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெ. சுரேஷை தொடர்பு கொண்டு பேசிய போது, இவ்விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்த அவர், இரு நாட்டு அரசாங்கத்தின் பார்வைக்கும் அது கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வேலாயுதம் அளித்தப் பேட்டியில் அவர் வைத்துள்ள சில குற்றச் சாட்டுகள் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருக்கின்றது. அந்தப் பேட்டியில் ஒட்டுமொத்த மலேசியத்  தமிழர்களையும் உணவக உரிமையாளர்களையும் மோசமானவர்களமென சித்தரிக்கப்பட்டிருப்பது வருத்தத்தைத் அளிப்பதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் ஓல்ட் டவுன் எனும் பகுதியில் வேலாயுதம் மோசாமாக நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் உணவகம் இருப்பதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். அது எந்த உணவகம் ? எங்கு உள்ளது என சுரேஷிடம் கேட்கப்பட்டபோது அந்த உணவகம் குறித்து தேடல் பணியில் இருப்பதாகவும் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் சுரேஷ் கூறினார்.

பாதிக்கப்பட்ட வேலாயுதம் தமது தரப்பு வாதங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து விட்டார். ஆனால், குற்றஞ்சாட்டப்படுகிற உணவகத்தினர் தரப்பிடமும் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது. அதற்கு, யார் அந்த உணவக உரிமையாளஎ என்பது தெரியவர வேண்டும் என சுரேஷ் தெரிவித்தார்.

இதனிடயே, கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான நேர்கொண்ட பார்வையின் தொகுப்பாளர் இலக்ஷ்மி இராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில், மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் தம்மை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் இவ்விவகாரம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை அவர் உறுதி செய்வதாகவும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டத்தோ ஶ்ரீ சரவணன் கூறியதாக இலக்ஷ்மி இராமகிருஷ்ணன் தனது டுவிட்டில் கூறினார்.

எனவே. முழு விவரங்களை ஆராய்ந்த பின்னரும் அனைத்துத் தகவல்களைச் சேகரித்த பின்னரும் மனிதவள அமைச்சரை மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் – பிரிஸ்மா நேரடியாக சந்திக்கனிருப்பதாகவு சுரேஷ் குறிப்பிட்டார்.

மேலும், சுற்றுப்பயணியாக யார் வேண்டுமானாலும் மலேசியா வரலாம்,. ஆனால், இங்கு வேலைக்காக வாழ்வாதாரத்தைத் தேடி வருகிறவர்கள் முறையான வேலைக்கான ஆவணங்களோடும் அனுமதியோடும் (Work Permit) வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் வேலை தேடி வருகிறவர்களுக்கும் சிக்கல் இங்குள்ள முதலாளிகளுக்கும் சிக்கல்.

மலேசியாவைப் பொறுத்தவரை இங்கு அனைத்தும் சட்டத்திற்குக் உட்பட்டது. ஆனால், தங்களின் சொந்த நாட்டில் இருந்து புறப்படும்போது என்ன சிக்கலோடு இங்கு வருகிறார்கள் என எங்களுக்குத் தெரியாது. இது சில இடைத் தரகர்களால் ஏற்படும் பெரும் பிரச்சனை.

சில முதலாளிகள் மனிதாபிமான அடிப்படையில் நல்ல எண்ணத்தோடு அந்நிய நாட்டவருக்குத் தற்காலிக வேலையையும் அதற்கான ஊதியத்தையும் வழங்குகிறார்கள்.

தற்காலிகமான முறையான ஆவணமில்லாத அந்தத் தொழிலாளிகள் ஒழுக்கத்துடனும் நேர்மையாகவும் பணிபுரியவே, அப்படியே அவர்களின் காலம் இங்கேயே கழிந்து விடும் சில சூழல்களும் உண்டு.னைதுவும் வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சனைக்கு ஒரு காரணமாக அமைகிறது என்கிறார் சுரேஷ்.

மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்கள் தொடர்பான அனைத்துச் சட்ட விதிகளும் சரியாக இருக்கின்றன. பெர்மிட் இல்லாமல் நாங்கள் இந்திய உணவக உரிமையாளர்கள் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில்லை.

வேலாயுதம் முன்வைத்துள்ளக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தீவிர விச்சாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சம்பந்தப்பட்டவருக்கு அநீதி  நடந்திருந்தால், அது கண்டிக்கத்தக்கது என சுரேஷ் தெரிவித்தார்.