கோலாலம்பூர் | ஜூன் 18 :-
தமிழகத் தொழிலாளி வேலாயுதம் மலேசிய உணவக உரிமையாளர் மீது வைத்தக் குற்றச் சாட்டு தொடர்பாக இன்று இரவு 8.30க்கு மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணனும், தமிழகத்தின் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியான நேர்கொண்ட பார்வையின் தொகுப்பாளர் இலக்ஷ்மி இராமக்கிருஷ்ணனும், குற்றம் சாட்டிய வேலாயுதமும் இயங்கலை வாயிலாக நேரடியாகச் சந்தித்தனர்.
தமிழகத் தொழிலாளர்கள் துன்புறுத்தல் தொடர்பாக அண்மைய நடவடிக்கைகள் குறித்து அதில் பேசப்பட்டது.
தொழிலாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைத்துலகத் தொழிலாளர்கள் மன்றத்தின் கோட்பாட்டின்படி அவர்கள் நலன் காக்கப்பட வேண்டும். நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில் மலேசியா செயல்பட்டு வருகிறது. அந்தப் பாதையில் மனிதவள அமைச்சு பயணிக்கிறது.
மலேசியாவில் 1.7 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் அனைவரும் நியாயமான முறையிலும் மரிதையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை மலேசிய அர்சாங்கம் ஆண்டாண்டு காலமாய் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.
வேலாயுதம் கூறியது போல் பிரச்சனைகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நடக்கும்போது தகுந்த முறையில் மலேசிய அரசாங்கம் உதவி செய்யத் தயாராக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு உண்டானப் பாதுகாப்பை வழங்குவது மலேசியாவின் நிலைப்பாடு என டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.
இந்த நாட்டில் பணிபுரின்கின்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு மனிதவள அமைசசு தனது கடமையைச் செய்யும். அதே வேளையில், இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் குறிப்பாக இந்திய உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமது தரப்புக்கு இது குறித்து புகார் கிடைத்தவுடன் உடனடியாக அந்தக் குறிப்பிட்ட உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட வேலாயுதம் சம்பந்தப்பட்ட உணவகத்தில் வேலை செய்தது, அங்கு மைக்கல் என்பருக்கு ஏற்பட்டத் தீக்காயம் போன்ற தகவல்கள் உண்மையெனக் கண்டறியப்பட்டு குற்றம் புரிந்தவரைக் கைது செய்ததாகவும்ழாது தொழிலாளர்களுக்கிடையேயான சண்டையில் ஏற்பட்டதாக உணவகத்தார் கூறியதை அந்தக் காணொலி சந்திப்பில் டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.
வேலாயுதம் சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்து தப்பி ஓடிய பிறகு எவ்வாறு மலேசியத் தமிழர்கள் அவருக்கு உதவி செய்தனர் என்றும் மீண்டும் தமிழகத்திற்கு அவர் எவ்வாறு திரும்பினார் என்றும் அதில் கூறினார்.
வேலாயுதம் கூறிய இரவி எனும் இரவீந்திரன் அந்த உணவகத்தில் உரிமையாளர் அல்ல எனவும் அவர் அந்த உணவகத்தின் செயல்முறை அதிகாரி எனவும் சொன்னார்.
வேலாயுதத்திற்கு சேர வேண்டிய ஊதியத்தையும் அந்த உணவகத்தார் தந்து விட்டதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இது போன்று வேறு எந்தத் தமிழகத் தொழிலாளிக்கும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரிடம் வேலாயுதம் கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, வேலாயுதம் மலேசிய வரக் காரணமாக இருந்த இடைத் தரகரின் தகவலை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் திருமதி இலக்ஷ்மி இராமக்கிருஷ்ணனிடம் கோரினார். அதனைக் கொண்டு அந்த இடைத் தரகர் வாயிலாகவோ அல்லது அந்த இடைத் தரகரோ மலேசிய நாட்டிற்குள் நுழையாதபடி மலேசியக் குடிநுழைவுத் துறை அவரைக் கருப்புப் பட்டியலில் இணைத்திடும். இது போன்ற இடைத்தரகர்கள் கலையப்பட்டால்தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.
மேலும், மலேசியாவில் இருந்து மீண்டும் வேலாயுதம் தமிழகம் திரும்ப அவர் மலேசிய அரசாங்கத்திடம் ரி.ம. 3,600 கட்டணம் செலுத்தியதாகவும் அதற்காக ஆவணத்தைத் தாம் வைத்திருப்பதாகவும் சொன்னார். அதனைக் கருத்தில் கொண்ட மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன், வேலாயுதத்தைப் பொருத்தமட்டில் அந்தத் தொகை மிகப்பெரியத் தொகை. எனவே, மனிதநேய அடிப்படையில் அவர் செலுத்திய அந்தக் கட்டணத்தை அவருக்கே திரும்பக் கிடைக்க உணவகத்தாரைக் கோர இருப்பதாகவும் அப்படி உணவகத்தார் உதவு செய்யாவிட்டால் மலேசிய அர்சாங்கமே அவ்வுதவியைச் செய்யத் தாம் ஏற்பாடு செய்வதாக டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.
இடைத்தரகர் வாயிலாக விவரங்கள் அறியாத வெளிநாட்டுத் தொழிலாளிகள் மலேசியா வந்து இது போன்று சிக்கிக் கொள்ளமல் இருக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தொழிலாளர்களின் நலனுக்காகவே பல திட்டங்கள் நடப்பில் இருக்கின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்,
மலேசிய – தமிழக உறவு என்றூம் தொடர வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளையும் கண்காணிப்பையும் மனிதவள அமைச்சும் மலேசிய அரசாங்கமும் என்றும் முன்னெடுக்கும் எனவும் டத்தோ ஶ்ரீ சரவணன் கூறினார்.
மேலும், இணையத்தில் பதிவேற்றம் கண்ட நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நிகழ்கால வேலாயுதத்தின் பபிரச்சனை தீர்க்கப்படுவது மட்டும் இல்லாமல் எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கும் இந்த நிகழ்ச்சி உதவி புரிந்துள்ளதுச் எனவே, அதற்காக தமது நன்றியையும் டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்துக் கொண்டார்.

