கோலாலம்பூர் | 9/7/2021 :-
அனைத்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக் குறிப்பிட்டு ஓர் ஊடக அறிக்கை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்குத் தங்களின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய மீட்சித் திட்டத்தின் வெற்றியே தங்களின் முதன்மை நோக்கம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவ்வாறு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தேசிய முன்னணியின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்பு இல்லை. மேலும், அக்கடிதம் யாரிடம் இருந்து வருகிறது என அனுப்புநர் பெயரோ பட்டியலோ இணைக்கப்படவில்லை.

இருந்த போதிலும், அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அந்த ஊடக அறிக்கையை புதிதாக நியமனம் செய்யப்பட்ட துணைப் பிரதமர் டாத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உறுதிப்படுத்தியுள்ளார்.
கெத்தெரே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அன்னுவார் மூசா உட்பட தேசிய முன்னணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஊடக அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் சிலர் தெளிவான பதிலைக் கூறவில்லை.
அம்னோ கட்சித் தலைவர் எனும் அடிப்படையில், பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டது மட்டும் இல்லாமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அக்கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்திருப்பதை அகமாட் ஸாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார்.
இதனிடையே, பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான நஜிப் இரஸாக், இந்த ஊடக அறிக்கை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
நானும் தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தான். ஆனால், நான் ஒரு போதும் அம்னோவின் உச்சமன்றம் எடுத்த முடிவை மீறியதில்லையே. இந்த ஊடக அறிக்கைக்கு உடன்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் உண்டா ? யார் இதனை வெளியிட்டது ?
முன்னாள் பிரதமர் நஜிப் இரஸாக்
பெயர்கள் இல்லாமல் “அனைத்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்” எனக் குறிப்பிட்டு கடந்த 23/6/2021 இதே போல் ஓர் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


