கோலாலம்பூர் | 13/12/2021 :-
ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் தற்போது செயல்பட்டு வரும் மலேசிய இந்தியர் உருமாற்ற மேம்பாட்டுப் பிரிவான மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என ம.இ.கா. கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மேலும், அதனை Unit Peneraju Agenda Bumiputera (Teraju) போன்ற அமைப்பு போல மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என ம.இ.கா.வின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தை பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடம் அவர் முன்வைத்தார்.
அதே சமயம், ஒவ்வோர் ஆண்டும் மித்ராவுக்கு ஒதுக்கப்படும் ரிம 100 மில்லியன் நிதி முடிக்கப்படாத நிலையில் அதனை மீண்டும் நிதியமைச்சிடமே ஒப்படைக்காமல் மித்ரா அறவாரியம் ஒன்றை அமைத்து அந்த மீதமுள்ள நிதியை அறவாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
அந்த அறவாரியத்தை அரசு அதிகாரிகள் நிர்வகிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னர் செடிக் ஆக இருந்த இப்போதைய மித்ராவுக்கு வழங்கப்படும் ரிம 100 மில்லியன் நிதியை குறிப்பிட்டக் காலத்தில் செலவு செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதை ஒப்புக் கொண்ட தான் ஶ்ரீ விக்னேஸ்வரன், ரிம 400 மில்லியனுக்கும் மேல் நிதியமைச்சிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுவதாகத் தெரிவித்தார்.
சமூக மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதியை கடுமையான விதிமுறைகளால் முழுமையாகப் பயன்படுத்தி முடிக்கப்பட முடியவில்லை.
அதே சமயம். நாட்டில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளில் சிறார் பள்ளிகளின் வகுப்பறைகள அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அப்பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டியும் ஆசிரியர்களுக்கு கற்றல் – கற்பித்தலுக்கு உதவும் கருவிகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரம் தேசியவ் முன்னணி ஆட்சியில் இருக்கும்போது முடிவு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டதாகவும், 14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அது தடைபட்டதாகவும் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தமதுரையில் குறிப்பிட்டார்.


