கோலாலம்பூர் | 4/1/2021 :-
ஸ்டேபிளர் கிளிப் எனப்படும் தைப்புக் கம்பியையும் ஆணியையும் பயன்படுத்தி உணவைப் பொட்டலாமாக்கக் கூடாது என உணவு விற்பனையாளர்களுக்கு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவை உணவில் கலந்து விட்டாலோ அல்லது வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு விட்டாலோ பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
உணவைப் பொட்டலமாக்க ஆணிகளைப் பயன்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு கவனத்தில் எடுத்துக் கொண்டது. அண்மையில் சமூக ஊடகங்களில் இவ்விவகாரம் பாதுகாப்பற்ற முறை என பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு செய்யும் தரப்பினருக்கு தண்டமும் சிறையும் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள் அல்லது பயனீட்டாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆணிகள் போன்ற பொருட்கள் உட்பட எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் இருப்பதை உணவு பொட்டலம் செய்பவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று 2009ஆம் ஆண்டின் உணவு சுகாதார விதிமுறையின் 36-வது பிரிவு கூறுகிறது.
உணவுப் பொட்டலங்களில் ஆணிகள், ஸ்டேபிள்ஸ் அல்லது அதுபோன்ற ஆபத்தான பொருட்களைப் பயன்படுத்தும் உணவு வியாபாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிம 10,000 க்கு குறைவான தண்டமோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
உணவில் ஆபத்தான பொருள் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனையும் விதிக்கப்படலாம். பிரிவு 13, உணவுச் சட்டம் 1983 இன் கீழ், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருளைக் கொண்டிருக்கும் எந்தவொரு உணவையும் தயாரித்து அல்லது விற்கும் எவரும் ஒரு குற்றவாளியே. அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், ரிம100,000க்கு குறையாத தண்டமோ அல்லது பத்து ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனையோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
உணவு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் பல்வேறு பாதுகாப்பான உணவுப் பொட்டல முறையைக் கையாளலாம்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொட்டலமாக்கப்பட்ட உணவுகளை வாங்கி கொடுப்பதற்கு முன்னர் அனைத்தையும் பரிசோதிக்க வேண்டும் என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.
இவ்வாறான பொட்டலமாக்கும் முறை அல்லது உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்களைக் கொடுக்க அருகில் உள்ள மாநில சுகாதாரத் துறை, மாவட்ட சுகாதார அலுவலகம், இணையப்பக்கமான http://moh.spab.gov.my அல்லது உணவுப் பாதுகாப்பு – தரப் பிரிவு முகநூல் பக்கம் www.facebook.com/bkkmhq ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம் ,


